கப்பலோட்டிய தமிழனின் கண்ணீர் சிந்த வைக்கும் தியாகங்கள்!


கப்பலோட்டிய தமிழனின் கண்ணீர் சிந்த வைக்கும் தியாகங்கள்!
x
தினத்தந்தி 5 Sep 2021 8:07 PM GMT (Updated: 5 Sep 2021 8:07 PM GMT)

தேசப்பற்றும், தமிழ்ப்பற்றும், சைவ சமய பற்றும் ஒருங்கே கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

வ.உ.சி.யின் கணக்கிலடங்கா கண்ணீர் சிந்த வைக்கும் தியாகம் என்னும் மலர்களால்தான் இந்திய சுதந்திரம் என்ற ஆலயத்தில் பூஜை செய்யப்படுகிறது. 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்பகாலங்களில் ஒட்டப்பிடாரத்தில் வக்கீல் தொழில் நடத்தி, புகழ் பெற்று விளங்கினார்.அந்த வயதிலேயே சுதந்திர வேட்கை கொண்ட அவர், பொருள் ஈட்டவேண்டும் என்று வியாபாரம் செய்ய இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயர் கையில் இருந்து நாம் மீளவேண்டும் என்றால், அவர்கள் நடத்தி வரும் வியாபாரத்தில் குறிப்பாக கப்பல் போக்குவரத்தில் நாம் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில், 1906-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதியன்று, அதாவது வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தேதியில் தூத்துக்குடியில் ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன்’ என்ற கம்பெனியை தொடங்கி, ஆரம்பகாலத்தில் 2 கப்பல்களை குத்தகைக்கு எடுத்தார்.

இந்தியன் ஒருவன் அதுவும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவன் கப்பல் ஓட்டுவதா? என்று கொதித்தெழுந்த ஆங்கிலேயர் அந்த குத்தகையை ரத்து செய்ய முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றனர். குத்தகைக்கு எடுத்தால்தானே உன்னால் ரத்து செய்யமுடியும், நாங்களே கப்பல் வாங்கி கடலில் ஓட்டுகிறோம் என்று முயற்சி செய்து வ.உ.சி. அதிலும் வெற்றி கண்டார். ‘காலியோ’, ‘லாவோ’ என்ற கப்பல்களை வாங்கி சுதேசி கப்பல் கம்பெனியாக ஓட்டினார்.

இந்தநிலையில், சுதந்திர போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்ட வ.உ.சி. ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் அடைந்த கொடுமைக்கு அளவே இல்லை. புழுக்கள் நெளிந்த கேழ்வரகு கூழ் கொடுத்தது மட்டுமல்லாமல் தலை மொட்டை அடிக்கப்பட்டு, கால்களில் விலங்கு மாட்டப்பட்டு தானியம் உடைக்கவும், நூல் நெய்யவும் வேலை கொடுத்தனர். இதுமட்டுமல்லாமல் கோயம்புத்தூர் சிறையில் கைகளிலும், கால்களிலும் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த நிலையிலும் மாடு இழுக்கவேண்டிய செக்கை வ.உ.சி.யை இழுக்க வைத்தனர். சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவேயில்லை.

ஆரம்பத்தில் இரண்டு - 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. பிறகு மேல்முறையீடுகளில் சற்று தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை ஆனார். அவர் சிறையில் இருந்த காலத்தில் சுதேசி கப்பல்களையும் ஓட்ட முடியாமல் ஆங்கிலேயர் கொடுத்த இடையூறுகளால் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில், தொடக்கத்தில் அவரது வக்கீல் தொழிலுக்கான லைசென்சையும் ஆங்கிலேய அரசாங்கம் ரத்து செய்ததால், அந்த தொழிலிலும் ஈடுபடமுடியவில்லை.

பிறகு தனது வக்கீல் உரிமம் பெற வழிவகைசெய்த ‘வாலஸ்’ என்ற ஆங்கிலேய நீதிபதியின் பெயரை தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று சூட்டி நன்றி கடனை ஆற்றினார். ஒரு காலத்தில் வசதியோடு வாழ்ந்து வந்த வ.உ.சி. இறுதிக்காலத்தில் வறுமையையும் அனுபவித்தார். இவ்வாறு நாட்டுக்காக அளப்பரிய தியாகங்களை செய்த வ.உசி.யின் 150-வது பிறந்த நாளின் நினைவாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின்போது, வ.உ.சி.யின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சட்டசபையில் அவருடைய நினைவை போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆக, வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி 14 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டது மிகவும் வரவேற்புக்குரியது. மிகவும் பொருத்தமாக வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் தியாக திருநாளாக இனி கடைபிடிக்கப்படும். ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பு இனி காலம், காலமாக அவரை நினைவுகூரவைக்கும்.

Next Story