அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை!


அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை!
x
தினத்தந்தி 7 Sep 2021 6:49 PM GMT (Updated: 7 Sep 2021 6:49 PM GMT)

கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு திரைப்பட பாடலில், ‘ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்’ என்று ஒரு வரி உண்டு. அந்தவகையில் சமுதாயத்துக்காக வாழ்ந்து, நன்மைகள் பல செய்த தலைவர்களை சிலை வடித்து, போற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் பண்டையகாலந்தொட்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பண்டித ஜவகர்லால் நேரு, ராஜீவ்காந்தி போன்ற பல தலைவர்களின் திருஉருவச்சிலைகள் இருக்கிறது.

தந்தை பெரியாரின் அரும் தொண்டரும், பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியுமான, மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு சிலை இல்லாதது ஒரு பெரும் குறையாக இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்ட சிலை எம்.ஜி.ஆர். இறந்த தினத்தன்று உடைத்து தகர்க்கப்பட்டது பழைய சம்பவம். அண்ணாமலை பல்கலைக்கழகம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை பாராட்டி, சென்னை பகுத்தறிவாளர் கழகம் வேப்பேரி பெரியார் திடலில் 14-8-1971 அன்று நடத்திய விழாவில் கருணாநிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்கப்படும் என்று தந்தை பெரியார் அறிவித்தார். இதற்காக தன்னை புரவலராக கொண்ட ஒரு குழுவையும் அமைத்தார். ஆனால் கருணாநிதி தனக்கு சிலை அமைக்கவேண்டாம் என்று எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும், பெரியார் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இந்தநிலையில், பெரியாருக்கு சிலை வைத்தபிறகு தனக்கு சிலை வைப்பது பற்றி யோசிக்கவேண்டும் என்று கருணாநிதி கூறி, தி.மு.க. சார்பில் பெரியாருக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்தார். அதற்குள் பெரியார் மரணம் அடைந்துவிட்டார். பெரியார் சிலை திறப்பு விழாவின்போது மணியம்மையாரும் கலந்துகொண்டு, அந்த மேடையிலேயே கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று, அண்ணாசாலை-ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு சந்திப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்ட சிலையை 21-9-1975 அன்று குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். அதன்பிறகு 24-12-1987 அன்று எம்.ஜி.ஆர். இறந்தபோது நடந்த வன்முறையில் சிலர் கருணாநிதி சிலையை தாக்கி உடைத்து நொறுக்கிவிட்டார்கள். அப்போதே அந்த இடத்தில் மீண்டும் புதிய சிலை அமைக்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்தார். அப்போதும் கருணாநிதி வேண்டாம் என்று சொல்லி, அந்த பீடத்தையும் அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கி.வீரமணி சந்தித்து, இந்த கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார். இது பெரியார் நினைத்தது. பெரியார் எங்களுக்கு கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது. எனவே மீண்டும் அந்த இடத்தில் கருணாநிதி சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து நிச்சயமாக கருணாநிதி சிலை அண்ணா சாலையில் வைக்கப்படும் என்று சட்டசபையில் உறுதிபட தெரிவித்தார். இது நிச்சயம் வரவேற்புக்குரியது. தமிழ் சமுதாயத்தை பெரிதும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவான இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. கருணாநிதி சிலை விஷயத்தில் ஏற்கனவே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலை. அது இடித்து தகர்க்கப்பட்டதால், ஏற்கனவே அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலைக்கு பதிலாகத்தான் திரும்ப புதிய சிலை வைக்கப்படுகிறதே தவிர, இனி புதிதாக அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என்று கி.வீரமணி தெரிவித்தது வலுவான கருத்து. எனவே சட்ட சிக்கல் இருக்காது என்ற நிலையில் விரைவில் கருணாநிதி சிலையை மீண்டும் திராவிடர் கழகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அரசு அனுமதி வழங்கவேண்டும் என்பதே கருணாநிதி மீது பற்றும், பாசமும் கொண்டுள்ள தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story