கூட்டம் கூடினால் கொரோனா பரவும்!


கூட்டம் கூடினால் கொரோனா பரவும்!
x
தினத்தந்தி 8 Sep 2021 8:47 PM GMT (Updated: 8 Sep 2021 8:47 PM GMT)

கொரோனா இந்தியாவில் கால் பதித்து, 18 மாதங்கள் ஆகியும் பரவல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

கொரோனா இந்தியாவில் கால் பதித்து, 18 மாதங்கள் ஆகியும் பரவல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கொரோனா வராமல் தடுக்க தமிழக அரசு தடுப்பூசி போடும் எண்ணிக்கைகளை அதிகரித்து வருகிறது. அது மத்திய-மாநில அரசுகளின் கடமை. ஆனால் இதில் பொதுமக்களுக்கும் தங்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதில் பெரிய பங்கு இருக்கிறது.

அனைவரும் முககவசம் அணியவேண்டும். குறைந்தது 6 அடி தனிநபர் இடைவெளி வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். சானிடைசர் போட்டு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். முகத்தை தொடுவதற்கு முன்பும், பின்பும் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும். இருமல், சளி வருகிறதா? என்று பார்க்கவேண்டும். அவசியம் ஏற்பட்டால் தவிர, பிற நேரங்களில் வெளியே போகாமல் வீட்டிலேயே இருக்கவேண்டும். பயணங்களை தவிர்க்கவேண்டும்.

நேரடியாக கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களை பாதுகாக்கவேண்டும். சிறு, அறிகுறி இருந்தாலும் அலட்சியப்படுத்தக்கூடாது என்று பொன்விதிகளாக கூறப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆனால் மக்களிடையே இப்போது ஒரு அலட்சிய மனப்பான்மை தெரிகிறது. முககவசம் போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தினத்தந்தியில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் கூடிய படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒருவரையொருவர் நெருக்கியடித்துக்கொண்டு நின்ற காட்சியை பார்த்தால், இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடுமே என்ற அச்சம் ஏற்படுகிறது. அங்கு மட்டுமல்ல பல குடும்ப நிகழ்வுகளில்கூட மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாத நிலை இப்போது தொடங்கிவிட்டது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு கேரளாவே சாட்சி. இந்தியாவுக்குள் கொரோனா கால் பதித்ததே முதலில் கேரளாவில் தான்.

சீனாவின் உகான் நகரில் படித்துக்கொண்டிருந்த கேரள மாணவி ஒருவர் தாய்நாட்டுக்கு வரும்போது, கொரோனாவையும் கொண்டுவந்துவிட்டார். கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தநிலையில், பல நடவடிக்கைகள் மூலம் ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டு வந்திருந்த நேரத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் பண்டிகை கொண்டாட்டத்தில் வீட்டுக்கு வெளியே ஆனந்தமாக கூட்டம், கூட்டமாக கூடியதால் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துவிட்டது. தினமும் ஏறத்தாழ 30 ஆயிரம் பேருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் ஏற்பட்டுக்கொண்டு வருகிறது.

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69 சதவீதம் கேரளாவில்தான் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 100 பேருக்கு கேரளாவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், ஏறத்தாழ 20 பேருக்கு கொரோனா இருக்கிறது. இந்த பண்டிகை தினங்களில் மக்கள் வெளியே அதிகமாக நடமாடியது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே கேரளா தந்த பாடம் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் எங்கேயும் செல்லக்கூடாது. சமூக ஒன்று கூடல்களை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஓணம் பண்டிகைக்கு பிறகு எப்படி கொரோனா பரவியதோ, அதுபோல தமிழ்நாட்டிலும் பரவாமல் தடுக்க இனி அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்களில் கூடுமான வரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே பண்டிகைகளை கொண்டாடிக்கொள்ளவேண்டும்.

பண்டிகை கொண்டாட்டம் பெரிதா? உயிர் பெரிதா? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயமாக உயிர் தான் பெரியது. கொரோனா முழுமையாக ஒழிந்த பிறகு பண்டிகைகளை வெளியேயும் கொண்டாடலாம். சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றும்போது பொதுமக்கள் கலந்துகொள்ளவேண்டாம் என்ற உத்தரவு முன்மாதிரியான உத்தரவு ஆகும். அதுபோல இப்போது விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு நல்ல படிப்பினையாகும். மொத்தத்தில் எங்கும், எப்போதும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதும் முககவசம் அணிவதுமே தமிழ்நாட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நல்ல வழிமுறைகளாகும்.

Next Story