தலையங்கம்

கொரோனா மட்டுமல்ல, நிபா வைரசிலும் கவனமாக இருக்கவேண்டும்! + "||" + Be careful not only with the corona, but also with the Nipah virus!

கொரோனா மட்டுமல்ல, நிபா வைரசிலும் கவனமாக இருக்கவேண்டும்!

கொரோனா மட்டுமல்ல, நிபா வைரசிலும் கவனமாக இருக்கவேண்டும்!
‘தலைவலி போய் திருகு வலி வந்தது’ என்பார்கள். ஆனால் இப்போது கேரளாவில் தலைவலியும் போகவில்லை.
‘தலைவலி போய் திருகு வலி வந்தது’ என்பார்கள். ஆனால் இப்போது கேரளாவில் தலைவலியும் போகவில்லை. அது இருக்கும்போதே திருகு வலியும் வந்துவிட்ட ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில்தான். ஒரு நாளைக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழ்நிலையில், இப்போது நிபா வைரஸ் அச்சமும் சேர்ந்துவிட்டது. கேரளா கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அண்டை மாநிலமான தமிழ்நாடும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம் இப்போது வந்துவிட்டது. இந்தியாவிலேயே கொரோனா முதலில் காலெடுத்து வைத்தது, கேரளாவில்தான். அதேபோலத்தான், இப்போது நிபா வைரசும் காலெடுத்து வைத்திருக்கிறது. நிபா வைரஸ் பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால் மூலம் பரவுகிறது. இந்த வவ்வால்கள் சாப்பிட்டு கீழேபோடும் பழங்களை சாப்பிடுவதன் மூலமாகவும், அதை சாப்பிடும் பன்றிகள் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.


இந்த வைரசுக்கு நிபா வைரஸ் என்று பெயர் வந்ததற்கு காரணம், 1998-ம்ஆண்டு மலேசியாவிலுள்ள காம்புங் சுங்கை நிபா என்ற கிராமத்தில்தான் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த காலக்கட்டங்களில் ஏராளமான உயிர்களை இந்த வைரஸ் பறித்ததால் நிபா வைரஸ் என்று பெயர்சூட்டப்பட்டது. கேரளாவில் நிபா வைரஸ் புதிதல்ல. ஏற்கனவே 2018-ம்ஆண்டு 17 உயிர்கள் இந்த நிபா வைரசால் இழந்தநிலையில், தொடர்ந்து 2019-ம் ஆண்டும் இந்த வைரஸ் தாக்குதல்கள் இருந்தன. இப்போது கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் அருகேயுள்ள பழூர் என்ற இடத்தில் 12 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்துள்ளான். இந்த வைரஸ் மனிதர்களுக்கு மனிதர் தொடர்பின் அடிப்படையில் வேகமாக பரவும் என்பதால், அந்த சிறுவனுக்கு சிகிச்சையளித்த 4 மருத்துவமனைகளிலுள்ள மருத்துவப்பணியாளர்கள், குடும்பத்தினர், உறவினர் என்று 265 பேர் பட்டியலிடப்பட்டு, இப்போது மருத்துவ பரிசோதனையில் இருக்கின்றனர். இதில் 12 பேருக்கு நிபா வைரசின் அறிகுறியிருக்கிறது. மரணமடைந்த அந்த சிறுவன் வவ்வால்கள் கடித்துப்போட்ட ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசாங்கம் உடனடியாக ஒரு மத்தியக்குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி, பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள செய்திருக்கிறது. அந்தக்குழு சிறுவனின் வீடு, மருத்துவமனைகளை ஆய்வுசெய்து, சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள ரம்புட்டான் மரத்தின் பழங்களை சோதனைக்காக எடுத்துச்சென்றிருக்கிறது. புனேவிலுள்ள தேசிய தொற்றுநோய் நிறுவனம் அந்தச்சிறுவனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தமாதிரிகள் போன்ற பல்வேறு மாதிரிகளை சோதனை செய்ததில் இந்த மரணத்துக்கு காரணம் நிபா வைரஸ்தான் என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற வைரஸ் வராமல் தடுக்க ஒரு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான சோதனை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. விரைவில் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க உலகசுகாதார நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுமக்களும் அணில் கடித்துத்தின்ற பழம் சுவையாக இருக்கும் என்ற உணர்வோடு, ஏதாவது பறவைகள் சுவைத்த பழத்தை சாப்பிடக்கூடாது. பழங்களை சாப்பிடும்போது நன்றாக கழுவியோ, தோலை உரித்தோதான் சாப்பிடவேண்டும். கூடுமானவரையில் வவ்வால்கள், பன்றிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும். கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற மாவட்ட எல்லைகளில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்தமுறை நிபா வைரஸ் தமிழ்நாட்டுக்குள் காலெடுத்து வைக்காத அளவு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதுபோல, இந்தமுறையும் மாநில எல்லைகள் மட்டுமல்லாமல், அங்கிருந்து ரெயில், பஸ், விமானங்கள் மூலம் வரும் பயணிகளை நன்கு பரிசோதனைசெய்து, பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அதையும் கடும் பரிசோதனைக்கு ஆட்படுத்தவேண்டும். மொத்தத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் இருக்கவேண்டும். அதேபோல், தமிழ்நாட்டுக்குள் காலெடுத்து வைக்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு தமிழக-கேரள அரசுகள் மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கமும் முழுமுயற்சி எடுக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 21 பேருக்கு கொரோனா
கரூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 5 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் பாதிப்பு
கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.
4. கொரோனாவால் குறைந்தது, இந்தியர்களின் ஆயுள் காலம்; ஆய்வில் அதிர்ச்சித்தகவல்
கொரோனாவால் இந்தியர்களின் ஆயுள் காலம் குறைந்து இருக்கிறது என்ற அதிர்ச்சித்தகவல் ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
5. மேலும் 6 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.