நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு திட்டம் !


நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு திட்டம் !
x
தினத்தந்தி 10 Sep 2021 8:50 PM GMT (Updated: 10 Sep 2021 8:50 PM GMT)

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2-வது முறையாக வெற்றிபெற்றதற்கு மட்டுமல்லாமல், அந்த ஆட்சிக்கு முத்திரை பதித்த திட்டமென்றால், அது மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று கூறப்படும் நூறு நாள் வேலைத்திட்டம்தான்.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2-வது முறையாக வெற்றிபெற்றதற்கு மட்டுமல்லாமல், அந்த ஆட்சிக்கு முத்திரை பதித்த திட்டமென்றால், அது மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று கூறப்படும் நூறு நாள் வேலைத்திட்டம்தான். 2.2.2006-ம் ஆண்டு முதல் இந்ததிட்டம் தொடக்கத்தில் சில மாவட்டங்களிலும், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும் கிராமப்புறங்களில் திறன்சாரா, உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோருள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நூறுநாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம்தான் இது. இந்த திட்டத்துக்காகும் செலவு மத்திய, மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ.100 என்று வழங்கப்பட்ட ஊதியம், தற்போது ரூ.256 அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. மிகச்சிறந்த வறுமைஒழிப்பு திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட 263 பணிகளில் 182 பணிகள் இயற்கைவள மேலாண்மை பணிகளாகும். ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே அளவு ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் எல்லா இடங்களிலும் வேலையிழப்பு காரணமாக மக்கள் அவதிப்பட்ட சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த திட்டம் பெருமளவில் கைகொடுத்தது. கிராமப்புற பொருளாதாரம் ஓரளவு தாக்குப்பிடித்த நிலைக்கு காரணம், அங்கு செயல்படுத்தப்பட்டு வந்த நூறுநாள் வேலைத்திட்டம்தான்.

கொரோனா நேரத்தில் மத்திய அரசாங்கம் கூடுதலாக இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்கியது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டு திருத்தப்பட்ட பட்ஜெட் தொகையைவிட குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே கூடுதலாக இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கிராமப்புற ஏழை மக்களுக்கு இந்த திட்டம் வாழ்வு அளிக்கிறது. நகர்ப்புறங்களில்தான் 53 சதவீதம் மக்கள் வாழ்கிறார்கள். இங்குதான் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில் நகர்ப்புறங்களில் 10.23 சதவீதம் பேர் வேலையில்லாத்திண்டாட்டத்தால் வாடுகிறார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில் நூறுநாள் வேலைத்திட்டம் இருக்கிறதுபோல, நகர்ப்புறங்களில் நூறுநாள் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை மீண்டும் கொண்டுவர முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு தமிழ்நாட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், அதாவது நூறுநாள் வேலைத்திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இது மத்திய அரசாங்க திட்டம். எனவே மத்திய அரசாங்கம்தான் இதற்கான சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்றாலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அதுவரை காத்திருக்காமல் நகர்ப்புறத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் என்றவுடன் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒருமண்டலமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகளிலும் 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும், எப்படி கிராமப்புறங்களில் நூறுநாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ? அதுபோல நகர்ப்புறங்களிலும் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது மிக மிக வரவேற்கத்தகுந்த திட்டம். இது முன்னோடி திட்டம்தான் என்றாலும், இதில் எந்தெந்த பணிகள் எடுத்துக்கொள்ளப்படும்?, எவ்வளவு ஊதியம் வழங்கப்படும்? என்பதற்கு விரிவான அரசாணைகளை பிறப்பித்து விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவேண்டும். நகர்ப்புறங்களில் அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பால் வேலையிழந்தவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். இதன் செயல்பாட்டை பொறுத்து தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புறங்களிலும் இந்த வேலைவாய்ப்புத்திட்டத்தை அடுத்தடுத்து தொடங்கவேண்டும்.

Next Story