தலையங்கம்

உயிர்க்கொல்லி நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்... + "||" + Uyirkolli NEET Exam not need

உயிர்க்கொல்லி நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்...

உயிர்க்கொல்லி நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்...
தேர்தலுக்கு முன் மு.க.ஸ்டாலின் 505 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பதவியேற்ற முதல்நாளிலேயே சில வாக்குறுதிகளை நிறைவேற்றிய அவர், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்றுமுன்தினம் ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரி ஒரு மசோதாவை தாக்கல்செய்து அதுவும் ஒருமனதாக நிறைவேறியது. தேர்தல் அறிக்கையில் 160-வது வாக்குறுதியாக, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பள்ளி இறுதிவகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை தட்டிப்பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ‘நீட்’ தேர்வை ரத்துசெய்யும் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியது நிச்சயம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆகும்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இனி சட்டமன்ற செயலகத்தின்மூலம் சபாநாயகரின் ஒப்புதலைபெற்று சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு பல துறைகளுக்கு சுற்றோட்டமாக அனுப்பப்படும். பின்னர் முதல்-அமைச்சரின் கையெழுத்தோடு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்படும். கவர்னர் அந்த மசோதாவை பரிசீலித்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைப்பார். மத்திய அரசாங்கம் தன் பரிந்துரையுடன் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும். எனவே புதிய கவர்னராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவியின் முன்பு முதல் பரிசீலனைக்கு இந்த மசோதா இருக்கும். அவர் உடனடியாக மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, அவர்களும் அதுகுறித்து முடிவெடுக்கவேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய-மாநில அரசுகளின் ஒப்புதல் இதற்கு தேவைப்படுகிறது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும், மாநில அரசுகளும் இதுதொடர்பான சட்டங்களை இயற்றமுடியும் என்பது சட்டநிபுணர்களின் கருத்து. ஏற்கனவே நுழைவுத்தேர்வை ரத்துசெய்யும் மசோதா 2006-ல் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. அண்ணா காலத்தில் சுயமரியாதை திருமணம் தொடர்பான சட்டம், ஜனாதிபதியின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. 1994-ல் 69 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்ட 9-வது அட்டவணையில் சேர்க்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. தற்போதைய சட்டம் போல ஏற்கனவே அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெறாத நிலையில் இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட வேண்டியதே இல்லை. இந்த புதிய சட்டம் வலுவுள்ள சட்டம். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86 ஆயிரத்து 342 பேரிடம் கருத்துகள் கேட்டுபெற்ற அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம்.

மேலும் ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் உலகளவில் புகழ்பெற்ற டாக்டர்கள் படித்து முடித்து வந்திருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில், நீட் தேர்வு ஒரு உயிர்க்கொல்லி. ஏற்கனவே 13 மாணவச்செல்வங்கள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு தனுஷ் என்ற மாணவர், கனிமொழி என்ற மாணவியின் உயிரை பறித்திருக்கிறது. எனவே தமிழக மக்களின் உணர்வை புரிந்துக்கொண்டு மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து ஒரு நிரந்தர விலக்கு தரவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான், மத்திய அரசாங்கத்தின் கடமை என்ற வகையில் புதிதாக பொறுப்பேற்கும் கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக இதற்கு ஒப்புதலை கொடுத்து, மத்திய அரசாங்கமும் தனதுமுழுபரிந்துரையை அளித்து, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தரவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.