அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் இடம்


அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் இடம்
x
தினத்தந்தி 15 Sep 2021 7:56 PM GMT (Updated: 15 Sep 2021 7:56 PM GMT)

உயர்கல்வியில் தமிழ்நாடு மிகவும் பாராட்டத்தக்க அளவில் சாதனை படைத்து வருகிறது.

உயர்கல்வியில் தமிழ்நாடு மிகவும் பாராட்டத்தக்க அளவில் சாதனை படைத்து வருகிறது. கொரோனா பாதித்த காரணத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டாலும், அந்த கல்வியாண்டில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடந்து முடிந்தது. ஆனால் 2020-21-ம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தன. இதையடுத்து பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டன. கொரோனா பரவல் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் அவர்கள் அனைவருக்குமே பொதுத்தேர்வு இல்லாமல் தேர்ச்சியும் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம் மதிப்பெண், பிளஸ்-2 செய்முறைத்தேர்வு, அகமதிப்பீடு தேர்வில் 30 சதவீதம் மதிப்பெண் என்ற முறையில் 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண் போடப்பட்டது.

அதன்படி, 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 மாணவர்களும், 4 லட்சத்து 35 ஆயிரத்து 973 மாணவிகளும் பயனடைந்தனர். இந்த மதிப்பெண்களில் விருப்பமில்லாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதாமலும், தேர்வை எழுதியும் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர அதிக விருப்பத்தோடு சென்ற நேரத்தில், பல கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் 143 அரசு கலைக்கல்லூரிகளும், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அரசுக்கல்லூரிகளை பொறுத்தமட்டில், மொத்த இடங்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரம் தான். ஆனால் விண்ணப்பம் அனுப்பிய மாணவர்களின் எண்ணிக்கையோ 3 லட்சத்துக்கும்மேல். இந்தநிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டசபையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு செயலாக்கம் கொடுக்கும்வகையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறது. இதன்படி, “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள மற்றும் அதனைச்சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் அரசுக்கல்லூரிகளில் கல்விபயில மிக அதிகளவில் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த மாணவர்கள் தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சற்று கூடுதல்கட்டணம் செலுத்தி கல்விபயில சிரமப்படுகிறார்கள் என்பதை கருத்தில்கொண்டும், இந்த கல்வியாண்டில் அதிக விண்ணப்பங்கள் வந்ததை கருத்தில் எடுத்துக்கொண்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கலைப்பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அந்த கல்லூரிகள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதியை பெறவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதுபோல 20 சதவீதம் கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டன.

மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளில் இடமில்லாமல் மனம் கலங்கியிருந்த சூழ்நிலையில், 25 சதவீதம் இடம் கூடுதலாக வழங்கப்படும் என்ற ஆணை மிகவும் வரவேற்புக்குரியது. மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அரசுக்கல்லூரிகளில் கூடுதல்இடம் கொடுப்பதற்கு கூறப்படும் அதே காரணங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும், தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் நிச்சயம் பொருந்தும். அரசு கல்லூரிகளைப்போல அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். ஆனால் அரசுக்கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல்இடம் வழங்கப்பட்டதுபோல அரசு உதவிபெறும், தனியார் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர்சேர்க்கைக்கு அரசு ஆணையிடவேண்டும். பல்கலைக்கழகங்களும் அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதே அந்த கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளின் வேண்டுகோளாகவும், விருப்பமாகவும் இருக்கிறது.

Next Story