இனி மொட்டைக்கு இல்லை கட்டணம்!


இனி மொட்டைக்கு இல்லை கட்டணம்!
x
தினத்தந்தி 16 Sep 2021 7:56 PM GMT (Updated: 16 Sep 2021 7:56 PM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஒரு புத்துயிர் பெற்றிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஒரு புத்துயிர் பெற்றிருக்கிறது. “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப இந்த துறைக்கு பொருத்தமான பி.கே.சேகர்பாபுவை அமைச்சராகவும், ஜெ.குமரகுருபரனை ஆணையராகவும் நியமித்தார், முதல்-அமைச்சர். இந்த இரட்டையர் அணி பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஓரிரு கோவில்களுக்கு சென்று ஆய்வுசெய்து, பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகின்றது. தமிழ்நாட்டின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 627 கோவில்கள் இருக்கின்றன. இந்த நிர்வாகத்தின்கீழ் வராமல் மேலும் ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் எல்லா ஊர்களிலும் சிறு, சிறு கோவில்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு எண்ணற்ற புகழ்வாய்ந்த கோவில்களின் இருப்பிடம். “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்ற பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல், மக்கள் கூடும் மையங்களாகவும், பேரிடர் காலங்களில் புகலிடமாகவும், வரலாற்றுகளை பதித்துவைக்கும் ஆவணங்களாகவும், மனதை அமைதிப்படுத்தும் தியானக்கூடங்களாகவும் திகழ்கின்றன. மொத்தத்தில் இறைபக்தி உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக கோவில்கள் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. தி.மு.க. அரசில் கோவில்களில் பணக்காரர், ஏழை என்ற பேதம் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் ஒரே சேவை என்ற அளவில், எந்த பாகுபாடும் இல்லாமல் பல சேவைகள் வழங்கப்படுகின்றன. தமிழில் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் அது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முதுநிலை கோவில்களான 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டு, கோவில்களில் பெரிய பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு யார் அர்ச்சனை செய்ய வேண்டுமோ? அவர்களை அழைத்து அர்ச்சனை செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் அர்ச்சனைக்கு கட்டணம் கிடையாது. இதுபோல் அனைத்து கோவில்களிலும் தமிழ் அர்ச்சனைவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் கோவில்களில் முடிகாணிக்கை செலுத்துவது, அதாவது மொட்டை போட்டுக்கொள்வது என்பது தமிழ் கலாசாரத்தில் ஒன்று. பிறந்த குழந்தைக்கு முதலில் மொட்டைப் போடுவது கோவிலில்தான். கோவில் நேர்த்தி கடனுக்காகவும் மொட்டை போடப்படுகிறது. அதற்கு கோவில்களில் சில குறிப்பிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. கோவிலுக்கு கோவில் இந்த கட்டணத்தில் வித்தியாசம் இருந்தது. இந்த கட்டணத்தில் ஒரு பகுதியை முடிஇறக்கும் தொழில் செய்யும் பணியாளர்களுக்கு கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது. இந்தநிலையில் ‘இனி மொட்டைக்கு இல்லை கட்டணம்’ என்று சொல்லும் ஒரு நிலை திருக்கோவில்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. முடிஇறக்கும் தொழிலை செய்யும் பணியாளர்களுக்கு அந்த திருக்கோவில் நிர்வாகமே ஒவ்வொரு மொட்டை போடும் பணிக்கு ரூ.30 வழங்குகிறது. இதுதவிர அந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 1,749 முடி இறக்கம் செய்யும் பணியாளர்கள் பல்வேறு திருக்கோவில்களில் இந்த பணியை செய்துவருகிறார்கள். இந்த கட்டணமில்லா சேவையை முறையாக அறிமுகப்படுத்தவேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனைத்து திருக்கோவில்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

இதற்கிடையே, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோவில்களில் நாள் முழுவதும் 3 வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதுபோல், திருக்கோவில்களில் மேலும் பல இலவச சேவைகளை அளிப்பதற்கான திட்டங்களை இந்துசமய அறநிலையத்துறை பரிசீலித்து வருகிறது. மொத்தத்தில் கோவில்களுக்கு செல்லும் ஒரு பக்தர், “பையில் 10 காசு கூட இல்லை” என்றாலும், அவருடைய வழிபாட்டிலும் குறையிருக்கக்கூடாது. கோவில்களில் இருந்து பெறும் சேவையிலும் குறையிருக்கக்கூடாது என்ற வகையில், இந்துசமய அறநிலையத்துறை ஆற்றிவரும் சேவைகள் மிகவும் வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது. பக்தர்களின் மனதை குளிர வைக்கிறது.

Next Story