மலரட்டும் தமிழக அரசுடன் அழகிய நல்லுறவு!


மலரட்டும் தமிழக அரசுடன் அழகிய நல்லுறவு!
x
தினத்தந்தி 20 Sep 2021 7:45 PM GMT (Updated: 20 Sep 2021 7:45 PM GMT)

அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் பதவி இருக்கவேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து சில பிரிவுகளில் கவர்னரின் நியமனம், அதிகாரங்கள் தொடர்பான விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் பதவி இருக்கவேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து சில பிரிவுகளில் கவர்னரின் நியமனம், அதிகாரங்கள் தொடர்பான விவரங்களும் இடம்பெற்றுள்ளன. எல்லா மாநிலங்களிலும் கவர்னர்தான், முதல் குடிமகனாக கருதப்படுகிறார். கவர்னருக்கு நேரடியாக நிர்வாகத்தை நடத்தும் அதிகாரம் இல்லை என்றாலும், அரசின் நிர்வாக ஆணைகள் எல்லாமே அவரது ஒப்புதலைப் பெற்றுத்தான் செயல்படுத்தப்படவேண்டும். அந்த வகையில், கவர்னர் அரசின் வேகமான செயல்பாடுகளுக்கு வழியேற்படுத்தவும் முடியும், முட்டுக்கட்டைப்போட்டு தடை ஏற்படுத்தவும் முடியும்.

முந்தைய அ.தி.மு.க. அரசில்கூட, அரசு பள்ளிக்கூடங்களில் படித்து “நீட்” தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்தினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து அமைச்சரவை மற்றும் சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற விமர்சனமும் உண்டு.

இந்தநிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, நாகலாந்து கவர்னராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். இவர், அண்டை மாநிலமான கேரளாவில் 10 ஆண்டுகள் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர். மத்திய அரசாங்க உளவுப்பிரிவில் சிறப்பு இயக்குனராக பணியாற்றியதுடன், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் இருந்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இணை உளவுப்பிரிவு கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். மத்திய அரசாங்கத்துக்கும், நாகலாந்து தேசிய சோசலிஸ்டு கவுன்சிலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசாங்கம் சார்பில் மத்தியஸ்தராக இருந்து சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகவைத்த பெருமை அவருக்கு உண்டு.

நீண்டகாலம் உளவுப்பிரிவில் பணியாற்றிய ஆர்.என்.ரவி தமிழகத்தின் 26-வது கவர்னராக பொறுப்பேற்றதும், ‘வணக்கம் என்று பத்திரிகையாளர்களிடம் பேசத் தொடங்கும்போது தமிழில் கூறியதும், தமிழ் தொன்மையான மொழி, தமிழை கற்க முயல்வேன் என்று சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தமிழக அரசுடன் கவர்னர் என்ற முறையில் எனக்குள்ள உறவு ஒரு சுத்தமான புதிய எழுதுபலகை (சிலேட்) போன்றது. இதை வருங்காலங்களில் மிக அழகியதாக்குவதற்கு எனது முயற்சிகள் இருக்கும். தமிழ்நாட்டின் அறிவார்ந்த, ஆன்மிக, கலைநயமிக்க செல்வங்களும், அரசியல் ஞானமும் இந்தியாவுக்கு பெரும் பலனைக் கொடுத்துள்ளது. இந்தியாவின் எண்ண ஓட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக மக்களின் பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது. நிர்வாகம் என்பது அரசின் பொறுப்பு. கவர்னர் என்ற முறையில் நான் அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு செயல்படவேண்டும் என்பதை நன்றாக அறிவேன். தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கையாண்ட நடவடிக்கைகள் மிகவும் நன்றாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசோடு உள்ள உறவு அழகிய நல்லுறவாக மலரச்செய்வார் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி என்ற நம்பிக்கை முதல் நாள் பேச்சிலிருந்து உறுதியாக தெரிகிறது. ஒரு அரசு தங்குதடையில்லாமல் விரைவாக செயல்படவேண்டும் என்றால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நல்லுறவு இருக்கவேண்டும். இரு குதிரைகள் பூட்டிய “சாரட் வண்டி” போல்தான் அரசு நிர்வாகம் இருக்கவேண்டும். ஒரு குதிரையான அரசும், மற்றொரு குதிரையான கவர்னரும் ஒன்றுபோலச் சென்றால்தான் நிர்வாகம் என்ற “சாரட் வண்டி” தன் பயணத்தை தடையில்லாமல் தொடர முடியும். ஆளுக்கொரு பக்கம் இழுத்தால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடும். கவர்னர் ஆர்.என்.ரவி முதல் நாள் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், “இந்த உறவை அழகான உறவாக ஆக்குவதற்கு முயற்சிப்பேன்” என்று கூறியது நிச்சயமாக எதிர்காலத்தில் மணமூட்டும் மலராக இருக்கும், இருக்கவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story