100 சதவீதம் தடுப்பூசி போட்டு நீலகிரி மாவட்டம் சாதனை!


100 சதவீதம் தடுப்பூசி போட்டு நீலகிரி மாவட்டம் சாதனை!
x
தினத்தந்தி 22 Sep 2021 7:53 PM GMT (Updated: 22 Sep 2021 7:53 PM GMT)

வேகமாக செல்லும் அதிவேக விரைவு ரெயில், வழியில் ஏதாவது ஒரு இடத்தில் ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டாலோ, சீரமைக்கும் பணிகள் நடந்தாலோ, நத்தை வேகத்தில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வேகமாக செல்லும் அதிவேக விரைவு ரெயில், வழியில் ஏதாவது ஒரு இடத்தில் ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டாலோ, சீரமைக்கும் பணிகள் நடந்தாலோ, நத்தை வேகத்தில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுபோல, உலகமே வேகமாக பொருளாதார வளர்ச்சியில் பீடுநடை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், கொரோனா பாதிப்பு எல்லாவற்றையுமே பின்னுக்கு இழுத்துவிட்டது. தடுப்பூசி ஒன்றுதான் கொரோனா பாதிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நிலையில், உலகமே தடுப்பூசிபோட தீவிர ஆர்வம் காட்டிவருகிறது.

சீனாவில்தான் கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில், எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிடவேண்டும் என்று, அதிவேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சீனாவில் 218 கோடி டோஸ்கள் போடப்பட்டு இருக்கிறது. தற்போது 100 கோடிக்கும் மேலான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு முடிவுக்குள் 80 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என்ற வேகத்தில் சீனா இதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. இப்போதே, 71 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இந்த இலக்கை அடைவது, அதுவும் வீடு வீடாகப்போய் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நிச்சயம் எளிது என்றே கருதப்படுகிறது.

இந்தியாவில் சமீபத்தில் எடுத்த கணக்குப்படி, 61 கோடியே 43 லட்சத்து 90 ஆயிரத்து 226 பேருக்கு முதல் டோசும், 21 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரத்து 528 பேருக்கு 2 டோஸ்களும் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு மிக அதிக அளவில் முன்னுரிமை கொடுத்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுத்து வரும் தீவிர முயற்சியின் காரணமாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கண்காணிப்பு, ஊக்கமளித்தல் காரணமாகவும் இதுவரை 4 கோடியே 33 லட்சத்து 59 ஆயிரத்து 843 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. கடந்த 12-ந்தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஊக்குவித்து வருகிறார்.

இந்தநிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இதில் முழு மூச்சாக ஈடுபட்டதால், அந்த மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், குறிப்பாக மலைவாழ் மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டது. வீடு வீடாக சென்று அரசுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், அங்குள்ள மக்களிடம் தடுப்பூசி போட விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மதுக்கடைகளில் தடுப்பூசி போட்ட சான்றை காட்டினால்தான் மது வாங்க முடியும் என்றும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்களிடம், தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என்றும் கேட்டு ஆலோசனை வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

முதல் டோஸ் போட்டதில் சாதனை படைத்ததுபோல, வெகுவிரைவில் 2-வது டோஸ் போடுவதிலும் சாதனை படைக்க வேண்டும் என்று இன்னசென்ட் திவ்யா மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதுபோல, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முழு வீச்சில் செயல்பட்டு, இந்தியாவிலேயே தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் டோஸ், 2 டோஸ்கள் தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழ்நாடுதான் என்ற பெயரை பெறவேண்டும். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான உள்கட்டமைப்பு வசதி, பணியாளர்களின் உற்சாகம், மக்களிடம் விழிப்புணர்வு எல்லாமே இருப்பதை கருத்தில்கொண்டு, மத்திய அரசாங்கம் கிள்ளி கொடுத்துக்கொண்டிருக்கும் தடுப்பூசிகளை அள்ளிக்கொடுத்து, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே தமிழகத்தின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story