தலையங்கம்

பாரதியார் கனவும், பெரியாரின் இலக்கும் நிறைவேறுகிறது + "||" + Bharathiyar's dream and Periyar's goal come true

பாரதியார் கனவும், பெரியாரின் இலக்கும் நிறைவேறுகிறது

பாரதியார் கனவும், பெரியாரின் இலக்கும் நிறைவேறுகிறது
தமிழ்நாடு எப்போதுமே பெண்களை போற்றி வணங்கும் நாடு. அதனால்தான் நம் தமிழ்நாட்டை தாய்நாடு என்கிறோம். தமிழ்த்தாய் என்று வழிபடுகிறோம்.
தமிழ்நாடு எப்போதுமே பெண்களை போற்றி வணங்கும் நாடு. அதனால்தான் நம் தமிழ்நாட்டை தாய்நாடு என்கிறோம். தமிழ்த்தாய் என்று வழிபடுகிறோம். பண்டையகாலத்தில் இருந்தே நமது தலைவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார்கள். குறிப்பாக மகாகவி பாரதியார், ‘பெண்கள் விடுதலை கும்மி‘ என்ற பாட்டில், ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!‘ என்று முழங்கினார். அவர் கனவு நனவாகும் வகையில் இப்போது கல்வியில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக சிறந்து விளங்குகிறார்கள். இந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 தேர்வில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். ஆனால் மாணவிகளை பொறுத்தவரையில், 4 லட்சத்து 35 ஆயிரத்து 973 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டிலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயரப்போகிறது.


இதேபோல தந்தை பெரியார் ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு எல்லா முன்னேற்றமும் பெறவேண்டும் என்ற நோக்கில் பாடுபட்டார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் ‘பெண்களுக்கு சமத்துவம்‘ என்ற தலைப்பில் தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில் பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக சொத்துரிமைகளும், வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்படவேண்டும். பெண்களும் ஆண்களை போலவே எந்த தொழிலையும் மேற்கொண்டு நடத்திவருவதற்கு அவர்களுக்கு சமஉரிமையையும், அவகாசமும் கொடுக்கப்படவேண்டும். பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்கு தக்கஏற்பாடு செய்யவேண்டும். ஆரம்பக்கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலைக்கு பெண்களையே நியமிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியாரின் இலக்கை அடையும் வகையில் உத்தரவுகளை பிறப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மரியாதை என்ற நோக்கில் செயல்பட்ட கருணாநிதி, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும், அரசுப்பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் நிறைவேற்றினார். ‘கலைஞர் வழியே என் வழி‘ என்று செயல்படும் மு.க.ஸ்டாலின் தேர்தல்அறிக்கையில் 246-வது வாக்குறுதியாக, ‘அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் தற்போது பெண்களுக்கு வழங்கப்படுகின்ற 30 சதவீதம், இடஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் 40 சதவீதமாக உயர்த்தப்படும்‘ என்று அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதெல்லாம் வேகமாக நிறைவேற்றிவரும் மு.க.ஸ்டாலின் அரசில் கடந்த 13-ந்தேதி சட்டசபையில், ‘அரசு பணிநியமனங்களில் தற்போது பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்‘ என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அறிவித்துள்ளார். ஆக பெண்களுக்கு விரைவில் 40 சதவீத இடஒதுக்கீடு வரப்போகிறது. 40 சதவீத இடஒதுக்கீடு நிச்சயமாக கிடைக்கும். மீதமுள்ள இடங்களுக்கும் திறமையின் அடிப்படையில் அவர்களால் வரமுடியும்.

ஏற்கனவே, இப்போதெல்லாம் பல பணிகளில் ஆண்களைவிட பெண்களே அதிகம் தேர்ச்சிபெறும் நிலையில் இந்த 40 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையிலும், அவர்கள் தகுதியின் அடிப்படையிலும் மேலும் பல இடங்களும் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2017-2018-ம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அளித்த புள்ளிவிவரத்தில், தமிழகஅரசு, அரசுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் 8.8 லட்சம் அரசுஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 2.92 லட்சம் பேர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கும்போது, 30 சதவீதம் பெண்கள் இடஒதுக்கீடு நியமனம் என்றால், 33 சதவீதம் இருக்கிறார்கள் என்ற விவரம் அப்போது தெரியவந்தது. இப்போது கணக்கெடுத்தால் இன்னும் அதிகமாக இருப்பார்கள். 40 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபிறகு, பெண்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு மேல் போய், ‘ஆண்கள் எங்களுக்கு வேண்டும் இடஒதுக்கீடு‘ என்று கேட்கப்போகும் நாள் நிச்சயமாக தூரத்தில் இல்லை. இந்த 40 சதவீத இடஒதுக்கீடு பாரதியார் கனவையும், பெரியார் இலக்கையும் நிறைவேற்றும் என்பது உறுதி.

தொடர்புடைய செய்திகள்

1. பாரதியாருக்கு உரிய கவுரவம் கிடைக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்
மகாகவி பாரதியாரின் 100-வது நினைவுதினத்தையொட்டி, ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
2. பாரதியார்-இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்; சீமான் மலர்தூவி அஞ்சலி
நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாரதியாரின் 100-ம் ஆண்டு நினைவுநாள் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் 64-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று காலை சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
3. பாரதியார் பாடலை பொதுவுடமை ஆக்கிய ஏவி.எம்.
சினிமா தயாரிப்பிலும், படப்பிடிப்புக்கான ஸ்டூடியோ வைத்திருந்ததிலும் ஏவி.எம். நிறுவனம் மிகவும் முக்கியமானது.