இந்திய வரலாற்றை திருப்பி எழுத வைக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்


இந்திய வரலாற்றை திருப்பி எழுத வைக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்
x
தினத்தந்தி 24 Sep 2021 7:46 PM GMT (Updated: 24 Sep 2021 7:46 PM GMT)

தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்கள் மிக உன்னதமான பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும், நாகரிகத்துக்கும் சொந்தக்காரர்கள் என்று இலக்கியங்களில் எல்லோரும் வியக்கும் வண்ணம் கூறப்பட்டுள்ளன.

தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்கள் மிக உன்னதமான பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும், நாகரிகத்துக்கும் சொந்தக்காரர்கள் என்று இலக்கியங்களில் எல்லோரும் வியக்கும் வண்ணம் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதை நிரூபிப்பதற்கு இலக்கியங்கள் மட்டும் போதாது. அகழ்வாராய்ச்சிகள் மூலம் நடத்தப்படும் சான்றுகளும், அடையாளங்களும் வேண்டும் என்பது உலகறிந்த நடைமுறை. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் தொடங்கி பல அகழ்வாராய்ச்சிகள் ஏராளமான தொல்லியல் சின்னங்கள், வரலாற்று சின்னங்களை உலகமே வியக்கும் வண்ணம் வெளிக்காட்டியுள்ளது. தற்சமயம் தமிழக அரசின் தொல்லியல்துறை கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் தீவிரமான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துகள் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கிடைத்த முடிவுகளில் இந்த எழுத்துகளின் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.மு. 6-ம் நூற்றாண்டு எழுத்துகள்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 2 கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளும், கீழடி நாகரிகம் கி.மு. 6-ம் நூற்றாண்டை சார்ந்தது என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில், இதற்கு முந்தைய அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வுசெய்தபோது கி.மு. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே கொற்கை ஒரு துறைமுகமாக செயல்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிவகளை பறம்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கிடைத்த நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மியாமி நகரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சோதனைக்கூடமான பீட்டா அனாலிடிக்கல் லேபரட்டரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவர்கள் கார்பன் பகுப்பாய்வு முறையில் நடத்திய ஆய்வில் இந்த நெல்மணிகள் கி.மு.1155-ஐ சேர்ந்தது என கண்டறிந்துள்ளனர். எனவே தமிழரின் நாகரிகம் குறிப்பாக தென் இந்தியாவின் நாகரிக தொட்டில் என்று கூறப்படும், பொருநை ஆற்று நாகரிகம், அதாவது தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெறும் சான்றுகளை பார்த்தால், தமிழர் நாகரிகம் மிக பழமையான நாகரிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் ரூ.15 கோடி செலவில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது, மிகவும் வரவேற்புக்குரியது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என உலகுக்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி இனி உலகெங்கும் பயணம்செய்வோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழிநின்று நிறுவுவதே தமிழக அரசின் தலையாய கடமை என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

இதேகருத்தை ஆமோதித்து சென்னையில் நடந்த ஒரு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது, தமிழ்நாடு மிக பண்டைய காலத்திலிருந்து சிறந்து விளங்கும் ஒரு வளமான கலாசார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சில அகழ்வாராய்ச்சி பொருட்களின் கார்பன் டேட்டிங் காலத்தை அறியும் ஆய்வு தாமிரபரணி நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதை வெளிப்படுத்தி அதன் தொன்மையின்மீது புத்தொளி பாய்ச்சி இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுதவேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன் என்று கூறியது தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமைசேர்ப்பதாக அமைந்துள்ளது. ஆக இந்திய நாகரிகம் என்றால் அதற்கு முன்னுரை, முன்னோடி தமிழரின் நாகரிகம்தான் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஓங்கி ஒலிக்க செய்யவேண்டியது தமிழக அரசு, மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

Next Story