தமிழ்நாட்டில் தொழில் மாநாடுகள்!


தமிழ்நாட்டில் தொழில் மாநாடுகள்!
x
தினத்தந்தி 27 Sep 2021 9:59 PM GMT (Updated: 27 Sep 2021 9:59 PM GMT)

எந்தவொரு நாடும், மாநிலமும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்றால், அங்கே தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும்.

எந்தவொரு இடத்தில் புதிதாக ஒரு பெரிய தொழிற்சாலையோ அல்லது சிறிய தொழிற்சாலைகள் கொண்ட தொழிற்பேட்டையோ உருவானால், அந்தப்பகுதி முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் பெருகும். வர்த்தகம் தழைக்கும். மக்களின் வாழ்வாதாரம் வளம் பெறும். அரசுக்கும் வருவாய் உயரும்.

இதை அடிப்படையாக வைத்து, உப தொழில்கள், வணிக நிறுவனங்கள் என்று புதிது புதிதாக தோன்றும். அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை ஈட்டித்தரும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சிமிக்க மாநிலமாக மாற்றும் குறிக்கோளில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறு தொழில் துறை செயலாளர் அருண் ராய் ஆகியோர் கொண்ட அணியை மிகத்தீவிரமாக முடுக்கிவிட்டு வருகிறார்.

புதிய தொழில்கள் உருவாகும் முயற்சியில் தினமும் ஒரு முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கு. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், அந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கத்தின் வர்த்தகத்துறை ஒரு வார காலமாக நாட்டில் 100 முக்கிய மாவட்டங்களில் வணிக மற்றும் வர்த்தக வார நிகழ்ச்சிகள், மாபெரும் ஏற்றுமதியாளர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது. சென்னையில் கடந்த 22-ந்தேதி, “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பிலான ஏற்றுமதி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதில், தமிழக அரசின் பிரகடனமாக, “நமது பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம். உலக நாடுகளை தமிழகம் நோக்கி வர வைப்போம். ஏற்றுமதியில் ஏற்றம் காண்போம். முன்னேற்ற பாதையிலேயே எப்போதும் நடப்போம்” என்பதை உறுதிபட பதிவு செய்தார்.

அன்றைய தினம் ரூ.2,120 கோடியே 54 லட்சம் மதிப்பிலான 24 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய முதலீடுகள் சென்னையில் மட்டுமல்லாமல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சை, தூத்துக்குடி மற்றும் நெல்லை என்று தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இந்திய அளவில் தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்குகிறது. விரைவில் 3-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி வரவேண்டும் என்ற வகையில், அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். சென்னை தவிர, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் இந்த மாநாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதுபோல, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி தொடர்பான மாநாடுகள் நடக்கிறது. ஏற்றுமதி செய்யக்கூடிய மற்றும் புவிசார் குறியீடு பெற்ற உள்ளூர் பொருட்களின் கண்காட்சிகள் இந்த மாநாட்டில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு ஒரு புதிய உத்வேகம் காணவேண்டும். உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும். உலகமே தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழக தொழில் துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் லட்சியமே தமிழக அரசின், குறிப்பாக தொழில் துறையின், சிறு தொழில் துறையின் லட்சியமாக இருக்க வேண்டும்.

Next Story