உலக நாடுகளை கவர்ந்த மோடியின் அமெரிக்க உரை!


உலக நாடுகளை கவர்ந்த மோடியின் அமெரிக்க உரை!
x
தினத்தந்தி 28 Sep 2021 8:19 PM GMT (Updated: 28 Sep 2021 8:19 PM GMT)

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப்பயணத்தில், ‘குவாட்’ உச்சி மாநாடு, 76-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் மற்றும் அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் சந்திப்பு ஆகிய நேரங்களில், அவருடைய பேச்சுவார்த்தை, ஆற்றிய உரைகள் எல்லாமே தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தன.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘குவாட்’ என்ற நாற்கர கூட்டமைப்பாகும். இந்த ‘குவாட்’ அமைப்பின் தலைவர்கள் இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட நேரத்தில், இந்திய-பசிபிக் நாடுகளுக்கு உதவ ஆலோசனை நடத்தினர். இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தடுப்பூசி பற்றாக்குறையுள்ள, மிக அதிகமாக தேவைப்படும் நாடுகளுக்கு மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தொடங்குவதற்கு, மோடி எடுத்த முடிவை மற்ற 3 நாட்டு தலைவர்களும் பாராட்டினர். இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் பிரச்சினை, பிராந்திய பாதுகாப்பு, கொரோனா தடுப்பு, தொழில்நுட்ப மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பாக மோடி ஆற்றிய உரை எல்லோரையும் வியக்கவைத்தது.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை, அதில் கலந்துகொண்ட 109 நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே உற்றுநோக்க வைத்தது. உலகில் எந்த நாட்டுக்குப் போனாலும் மோடி, நமது வளமிக்க இலக்கியங்களை கோடிட்டுக் காட்டத்தவறுவதில்லை. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றால், பின்பு அந்த நடவடிக்கையின் தோல்வியை காலம் உறுதிசெய்துவிடும்’ என்று அவர் கூறியது அனைத்து நாடுகளையும் கவனிக்க வைத்தது.

தன் உரையைத் தொடங்கும்போதே, ‘அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக விளங்கும் ஒரு நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எங்கள் நாட்டிலுள்ள வேற்றுமையில் ஒற்றுமைதான் எங்கள் ஜனநாயகத்தின் அடையாளம். இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள், கலாசாரங்கள்தான் எங்களின் துடிப்பான ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டுகள். ரெயில் நிலையத்தில் தன் தந்தைக்கு உதவியாக டீ விற்றுக்கொண்டிருந்த சிறுவன் இன்று பிரதமராகி ஐ.நா. பொதுச்சபையில் பேசுவதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை’ என்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

பாகிஸ்தான் பிரதமர், ஐ.நா. பொதுச்சபை மேடையை தவறாக பயன்படுத்தி, காஷ்மீர் பிரச்சினை குறித்து தேவையில்லாமல் பேசினாலும், மோடி பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல், ‘பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் பயங்கரவாதத்துக்கு அரசியல் அர்த்தம் கொடுக்கிறார்கள். எந்தவொரு நாடும் ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலையை தங்கள் சுயநலத்துக்கான ஆதாயமாக பயன்படுத்திவிடாதபடி உஷாராக இருக்கவேண்டும். பயங்கரவாதத்தை அரசியலாக பயன்படுத்துபவர்களை அதே ஆயுதம் பதம்பார்க்கும் என்பதை மறந்துவிடக்கூடாது’ என்று சாட்டையடி கொடுத்தார்.

அதேபோல, ‘கடல் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு எந்தநாடும் செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது’ என்று சீனாவுக்கும் மறைமுகமாக ஒரு கண்டனத்தை மோடி பதிவு செய்தார். 21 நிமிடங்கள் மட்டுமே பேசினாலும், அவரது பேச்சு வந்திருந்த அனைத்து தலைவர்களின் இதயங்களையும் தொட்டது. ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஜோ பைடன் ஆதரவு அளித்தார்’ என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தனியாக நடந்த பேச்சுவார்த்தையில், அவரது மூதாதையர்களில் ஒருவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியபோது, ஒரு இந்தியப் பெண்ணை மணமுடித்து அவர்களது வழித்தோன்றல் மும்பையில் இருப்பதற்கான ஆவணங்களை திரட்டி ஜோ பைடனிடம் மோடி கொடுத்தது, ‘நாம் சொந்தக்காரர்களா?’ என்று மகிழ்ச்சியுடன் ஜோ பைடனை பேசவைத்தது. மொத்தத்தில் மோடியின் அமெரிக்க பயணம் இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் வகையிலும், உலக நாடுகளுக்கு இந்தியா பற்றியும், குறிப்பாக நரேந்திர மோடி பற்றியும் உயர்ந்த எண்ணம் ஏற்பட வழிவகுக்கும் விதமாகவும் அமைந்தது.

Next Story