கொரோனா உயிரிழப்புகளில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்


கொரோனா உயிரிழப்புகளில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:59 PM GMT (Updated: 2021-10-05T01:29:14+05:30)

இந்தியாவில் கொரோனா கால்தடம் பதித்தது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம். தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது மார்ச் மாதத்தில்.

இந்தியாவில் கொரோனா கால்தடம் பதித்தது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம். தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது மார்ச் மாதத்தில். கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் கடுமையாக முயற்சிகள் செய்தும், இன்னும் முழுமையாக அதை விரட்டியடிக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு கேடயம் தடுப்பூசியை 2 டோஸ்கள் போட்டுக்கொள்வதுதான் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட நடைமுறையாகும். அனைவருக்கும் டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுவிடும் என்று கடந்த மே மாதமே மத்திய சுகாதார மந்திரி உறுதியளித்து இருந்தார்.

இந்தியாவில் 83 கோடியே 40 லட்சத்து 82 ஆயிரத்து 814 பேர் 18 வயது பூர்த்தி அடைந்த தடுப்பூசிபோட தகுதியானவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என்றால், 166 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 628 டோஸ்கள்வேண்டும். ஆனால், நேற்று காலை நிலவரப்படி, மொத்தம் 90 கோடியே 79 லட்சத்து32 ஆயிரத்து 861 டோஸ்கள்தான் போட்டு முடிக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குப்படி பார்த்தால், இன்னும் போகும் பாதை தூரம்தான்.

தமிழ்நாட்டில் 6 கோடியே 6 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டிருந்த நிலையில், இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகை 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் என்றும், அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என்றால், 11 கோடியே 57 லட்சத்து 82 ஆயிரம் டோஸ்கள் தேவை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை, நடந்த 4 மெகா தடுப்பூசி முகாம்களில் 87 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை, தமிழ்நாட்டில் 4.96 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘‘கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்’’ என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், 7.4 சதவீத உயிரிழப்புகள் ஒரு டோஸ் போட்டவர்களுக்கும், 3.5 சதவீத உயிரிழப்புகள் 2 டோஸ் போட்டவர் களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆக, தடுப்பூசி போட்டுவிட்டோம், இனி நமக்கு கொரோனா வராது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடியே 4 லட்சம் மூத்த குடிமக்களில் நிறைய பேர் இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். கடந்த வாரம் தினசரி உயிரிழப்புகளை கணக்கெடுத்தால் 72 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் வேண்டும். இந்த ஆண்டு இறுதி, அதாவது டிசம்பர் 31-ந்தேதிக்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்றால், தினசரி சராசரி 7 லட்சத்து 60 ஆயிரத்து 713 பேருக்கு தடுப்பூசி போட்டாக வேண்டும்.

அந்தவகையில், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு வழங்கும் தடுப்பூசி வினியோகம் தினமும் 8 லட்சமாக இருந்தால்தான், இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் போட்டுமுடிக்க முடியும். இந்த மாதத்துக்கு மத்திய அரசாங்கம் 1.23 கோடி டோஸ்கள்தான் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதெல்லாம் நிச்சயமாக போதாது. இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டு, தமிழக அரசு மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தட்டி, மாதத்துக்கு 2 கோடியே 40 லட்சம் டோஸ்கள் தடுப்பூசியை பெறவேண்டும் என்பதே இன்றைய சூழ்நிலையில் அவசர அவசிய தேவையாக இருக்கிறது.

Next Story