மக்கள் நல்வாழ்வில் மோடியும்-மு.க.ஸ்டாலினும்...


மக்கள் நல்வாழ்வில் மோடியும்-மு.க.ஸ்டாலினும்...
x
தினத்தந்தி 6 Oct 2021 8:57 PM GMT (Updated: 2021-10-07T02:27:47+05:30)

‘நோயை குணமாக்குவதைவிட அதை வராமல் தடுப்பதே மேல்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

‘நோயை குணமாக்குவதைவிட அதை வராமல் தடுப்பதே மேல்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவர், ‘‘நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’, அதாவது ‘நோயை இன்னது என்று ஆராய்ந்து நோய்க்கு காரணம் இன்னதென்று தெரிந்து, அந்நோயை போக்கும் வழிஇன்னது என்று கண்டு பொருந்துமாறு செய்தல்வேண்டும் என்று கூறி சென்றார். இதே செயல்திட்டத்தை இப்போது பிரதமர் நரேந்திரமோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுத்தி வருகிறார்கள். ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ இயக்கத்தை கடந்த மாதம் 27-ந்தேதி பிரதமர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொருவருக்கும் 14 இலக்க எண் கொண்ட ஒரு டிஜிட்டல் சுகாதாரஅட்டை வழங்கப்படும்.

இந்த அட்டையில் ஒவ்வொருவரின் உடல்ஆரோக்கியம், அவர் மேற்கொண்ட பரிசோதனைகள், அவருக்கு இருக்கும் நோய்கள், அவர் எந்தெந்த டாக்டரை பார்த்தார்?, அவர் என்னென்ன மருந்துகளை உட்கொள்கிறார்?, ரத்த அழுத்தம் இருக்கிறதா?, நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பது போன்ற எல்லா தகவல்களும் அடங்கியிருக்கும். இதை அவர் எந்த டாக்டரிடமும் பகிர்ந்துகொண்டாலும், மருத்துவ ஆலோசனைகளை வழங்கமுடியும். அந்த அட்டையை வைத்து டாக்டர்கள் அவருக்குள்ள நோய்கள் பற்றி தெளிவாக புரிந்துக்கொண்டு, அவருக்கேற்ற சிகிச்சை முறைகளை அளிக்கவோ, ஆலோசனைகளாக வழங்கவோ முடியும். நாடு முழுவதிலுமுள்ள எந்த மருத்துவமனையோடும், யாரும் எளிதில் இணையதளம் மூலம் தொடர்புகொள்ளமுடியும்.

தமிழ்நாட்டிலும் இப்போது மு.க.ஸ்டாலின் கலைஞரின் ‘‘வருமுன் காப்போம்’’ திட்டத்தை அறிவித்துள்ளார். இது ஏற்கனவே கருணாநிதி அறிவித்து நடைமுறைப்படுத்திய திட்டமாகும். மக்களுடைய நல்வாழ்வில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிக அக்கறை கொண்டவர். இலவச கண்ணொளி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 1970-ம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தின்கீழ் இலவச கண்சிகிச்சை முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு, அதில் கலந்துகொண்டவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 2009-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி கலைஞர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அப்போதைய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் மூலம் தொடங்கிவைத்தார். அந்த திட்டம் இன்றளவும் செயல்பட்டு ஏழை-எளிய மக்கள் எல்லா சிகிச்சைகளையும் இலவசமாக பெற வழிவகுத்துள்ளது. இதேபோல 1999 மற்றும் 2006-ம் ஆண்டில் ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தையும் கருணாநிதி தொடங்கி செயல்படுத்தினார். இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இடையில் அவருடைய ஆட்சிமுடிந்து, அ.தி.மு.க. ஆட்சி வந்தபோது இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

இப்போது சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் பன்முனை மருத்துவபரிசோதனை, கண், பல், காது-மூக்கு-தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர்அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள், சிறுநீரககோளாறு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்புமருத்துவம், புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளும், தொடர்ந்து அந்த முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர்சிகிச்சை தேவைப்பட்டால், நோயின் தன்மையை பொறுத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டையும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். விரைவில் இந்த திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நோயிலும் நிபுணத்துவம் கொண்ட மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்துள்ள இந்த 2 திட்டங்களும் மக்களுக்கு பெரும் பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Next Story