வலிக்க வைக்கிறது பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை


வலிக்க வைக்கிறது பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை
x
தினத்தந்தி 8 Oct 2021 7:48 PM GMT (Updated: 8 Oct 2021 7:48 PM GMT)

கொரோனா பாதிப்புக்கு பிறகு பெரும்பாலான மக்கள் வேலையிழப்பு, வருமான குறைவு என்று வாடிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான விலைவாசி உயர்வும் அவர்கள் காலைப்பிடித்து கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்புக்கு பிறகு பெரும்பாலான மக்கள் வேலையிழப்பு, வருமான குறைவு என்று வாடிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான விலைவாசி உயர்வும் அவர்கள் காலைப்பிடித்து கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகள் எல்லாம் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு செலவுக்கும் இவ்வளவு என்று பட்ஜெட் போட்டுத்தான் செலவு செய்கிறார்கள். சில இனங்களின் விலை உயர்ந்தால் அதன்பயன்பாட்டை குறைத்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, கேரட் விலை உயர்ந்தால், வீட்டு சமையலில் கேரட்டை பார்ப்பது அரிதாக இருக்கும். ஆனால், வெங்காயம், தக்காளி போன்ற சில பொருட்களின் விலை குறைந்தாலும், உயர்ந்தாலும் அதன் பயன்பாட்டின் அளவை நிச்சயம் குறைக்கவே முடியாது.

அதேபோல, சமையல் கியாஸ் சிலிண்டரும், பெட்ரோல் பயன்பாடும் எல்லோரது வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தற்போது, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு மாதமும் எது உயர்கிறதோ உயரவில்லையோ, சமையல் கியாஸ் விலை உயர்ந்து கொண்டேபோகிறது. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.915.50 ஆகிவிட்டது. இந்தியாவில் சில நகரங்களில் ரூ.1000-ஐ நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.610 ஆக இருந்த நிலையில், ஒரு ஆண்டுகூட ஆகவில்லை ரூ.300-க்கு மேல் உயர்ந்துவிட்டது. பலருடைய மாத வருமானமே ரூ.300 உயராத நிலையில், சமையல் கியாஸ் விலை மட்டும் ரூ.300 உயர்ந்தது தாங்கமுடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டால், மக்கள் திரும்பவும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை உருவாவதை யாராலும் தடுக்கவே முடியாது.

சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்திய விவசாயி ஒருவரின் சராசரி மாத வருமானம் ரூ.6,426 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தால் மாதம் ரூ.1000 கியாஸ் சிலிண்டருக்காக நிச்சயம் செலவழிக்க முடியாது. கியாஸ் சிலிண்டர் உலகச்சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையை பொருத்துத்தான் இருக்கிறது என்றாலும், மத்திய அரசாங்கம் இதுவரை வழங்கிவந்த மானியத்தை நிறுத்தியதும் ஒரு காரணமாகும். எனவே, கியாஸ் சிலிண்டர் விலை குறையும் வரை மானியம் வழங்கியோ அல்லது மத்திய அரசாங்கம் வரிகளை குறைத்தோ, பொதுமக்களின் கஷ்டத்தை போக்க முன்வரவேண்டும்.

இதுபோல, பெட்ரோல், டீசல் விலையும் மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.101.01 ஆகும். டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.96.60 ஆகும். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் கூறலாம் என்றாலும், பெட்ரோல் - டீசலின் விலையில் பாதிக்கு மேல் மத்திய-மாநில அரசுகளின் வரியாகிறது. எடுத்துக்காட்டாக, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.99.53 என்று எடுத்துக்கொண்டால், அதன் அடிப்படை விலை ரூ.41.92 தான். அடிப்படை கலால் வரி என்ற வகையில் லிட்டருக்கு ரூ.1.40 என்றும், சிறப்பு கூடுதல் கலால் வரியாக ரூ.11-ம், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரியாக ரூ.2.50-ம், சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல் வரியாக லிட்டருக்கு ரூ.18-ம் என்று மத்திய அரசாங்க வரியே ரூ.32.90 ஆகிவிடுகிறது. டீசலுக்கு மத்திய அரசாங்க வரி ரூ.31.80 ஆகும். இதுதவிர, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, விற்பனையாளர்களுக்கான கமிஷன் எல்லாம் சேர்த்துத்தான் பெட்ரோல் விலை ரூ.99.53 என்றும், டீசல் விலை ரூ.94.44 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதுபோல மத்திய அரசும் தன் வரியை குறைத்து பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.

Next Story