தலையங்கம்

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின் வெட்டு வருமா? + "||" + Will there be power cuts due to coal shortage?

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின் வெட்டு வருமா?

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின் வெட்டு வருமா?
நாட்டில் மின்சார உற்பத்தியை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்து வளர்ச்சிகளும் இருக்கின்றன.
நாட்டில் மின்சார உற்பத்தியை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்து வளர்ச்சிகளும் இருக்கின்றன. தங்குதடையில்லாமல் மின்சாரம் இருக்கும் மாநிலங்களை நோக்கித்தான் தொழில் முனைவோர்களும் ஆர்வமாக செல்கின்றனர். நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையங்களும், நீரைப் பயன்படுத்தி புனல் மின் நிலையங்களும், அணுவை பயன்படுத்தி அணு மின் நிலையங்களும் இயங்குகின்றன. இதில், 70 சதவீத மின் உற்பத்தி அனல்மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான நிலக்கரி தட்டுப்பாட்டினால், எங்கே மின்சார உற்பத்தி தடைபட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


பொதுவாக, அனல் மின் நிலையங்களில் 14 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்திருந்தால்தான் நல்ல அறிகுறியாக பார்க்கப்படும். 7 நாட்களுக்கும் குறைவாக இருந்தால் நெருக்கடியான நிலை என்றும், 4 நாட்களுக்கும் குறைவாக இருந்தால் மிகவும் நெருக்கடியான நிலை என்றும் கருதப்படும். இந்தியா முழுவதுமுள்ள 135 அனல் மின்நிலையங்களில், 115 அனல் மின் நிலையங்களில்தான் சராசரியாக 4 நாட்களுக்குத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது. பல மாநிலங்களில் நிலைமை மிகமோசமாக போய்விட்டது. உலகிலேயே நிலக்கரி சுரங்கங்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது என்றாலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, தொழில் உற்பத்தி அதிகமான காரணத்தாலும், நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களில் மழை அதிகமாக பெய்யும் காரணத்தினாலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, “கோல் இந்தியா” நிறுவனம்தான், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்துவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, தூத்துக்குடியில் 1050 மெகாவாட் உற்பத்தி திறனுடைய அனல் மின் நிலையமும், மேட்டூரில் தலா 840 மெகாவாட், 600 மெகாவாட் உற்பத்தி திறனுடைய இரு அனல் மின்நிலையங்களும், வடசென்னையில் தலா 630, 1200 மெகாவாட் உற்பத்தி திறனுடைய இரு அனல் மின்நிலையங்களும் இருக்கின்றன. இதுதவிர, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தனியாரிடம் இருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும், காற்றாலை மூலமாக கிடைக்கும் மின்சாரத்தைப்பெற்று தேவையை பூர்த்திசெய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான நிலக்கரி, ஒடிசா மாநிலம் மகாநதி மற்றும் தெலுங்கானா சிங்கரேணி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

தற்போது, தமிழ்நாட்டில் 3.8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்புள்ள நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நிலக்கரி சுரங்கங்களிலிருந்து ஒவ்வொருநாளும் 60 ஆயிரம் டன் நிலக்கரியை கப்பல் மற்றும் ரெயில்கள் மூலம் கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்கள். இப்போதைக்கு, தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாமல் நிலைமையை சமாளித்துவிட முடியும் என்றாலும், ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ?, வருகிற நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ?, மின்வெட்டு வந்துவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. 10 நாட்களுக்கு குறையாத அளவு நிலக்கரி கையிருப்பு இருந்தால் மட்டுமே நல்லது என்று கருதப்படுகிறது.

இவ்வளவு நெருக்கடிக்கும் மத்தியில் தெலுங்கானா மாநிலம் 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்துள்ளது. இதற்கு காரணம், சிங்கரேணியில் அந்த மாநிலத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களிலிருந்து தேவையான நிலக்கரியை அவர்களே எடுத்துக்கொள்வதுதான். தமிழ்நாட்டுக்கும் ஒடிசாவிலுள்ள சந்திராபிலா நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. 9.32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அந்த நிலக்கரி சுரங்கத்தில், கடந்த செப்டம்பர் மாதமே நிலக்கரியை வெட்டியெடுக்க தொடங்கியிருக்கவேண்டும். ஆனால், இதுவரையிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்காததால், இன்னும் நிலக்கரியை வெட்டி எடுக்கமுடியவில்லை. உடனடியாக இந்த ஒப்புதலைபெற தமிழக அரசும் முயற்சிக்கவேண்டும். மத்திய அரசாங்கமும் அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்கவேண்டும் என்பதே, இந்த நெருக்கடியான காலத்தில் விடுக்கப்படும் பொதுவான கோரிக்கையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? - சித்தராமையா கேள்வி
நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கர்நாடகத்துக்கு உடனே நிலக்கரி ஒதுக்கீடு - மத்திய மந்திரியிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு உடனடியாக நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரியை நேரில் சந்தித்து பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.
3. ஆகஸ்டு மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 11.6 சதவீதம் அதிகரிப்பு
ஆகஸ்டு மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது.