அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர்!


அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர்!
x
தினத்தந்தி 17 Oct 2021 7:51 PM GMT (Updated: 17 Oct 2021 7:51 PM GMT)

மக்கள் வாழ்வில் தண்ணீர் என்பது மிகமிக அத்தியாவசிய தேவையாகும்.

மக்கள் வாழ்வில் தண்ணீர் என்பது மிகமிக அத்தியாவசிய தேவையாகும். நாட்டில் பல கிராமங்களில் குடிநீருக்காக தெருக்களிலுள்ள குழாய்களிலோ, வெகுதூரம் நடந்துசென்று நீர்ஆதாரங்களிலோ பெண்கள் குடங்களில் தண்ணீரை தூக்கிக் கொண்டுவரும் அவலநிலை இன்றும் தொடர்கிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 24 கோடியே 88 லட்சம் வீடுகள் இருந்தன.

“தூய்மை இந்தியா திட்டம்” - “அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை அமைக்கும் திட்டம்” போன்ற மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிவரும் பிரதமர் நரேந்திரமோடி 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி கிராமப்புற பகுதிகளிலுள்ள அனைத்துவீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு வழங்கும் வகையிலான ‘ஜல்ஜீவன்’ இயக்கத்தை தொடங்கிவைத்தார். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து, இந்தத்திட்டம் மிகத்தீவிரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தத்திட்டம் மத்திய-மாநில அரசு மற்றும் பயனாளிகளின் பங்களிப்போடு நிறைவேற்றப்படவேண்டிய திட்டமாகும். குடிநீர் இணைப்புக்கான தொகையில் 50 சதவீத தொகையை மத்தியஅரசாங்கமும், 40 சதவீத தொகையை மாநிலஅரசும், 10 சதவீத தொகையை பயனாளிகளும் பங்கிட்டு வருகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 2019-ம் ஆண்டு இந்தத்திட்டம் தொடங்கப்படும்வரை, நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் மட்டுமே குடிநீர்குழாய் இணைப்பு இருந்தது. இப்போது இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, 80 மாவட்டங்களிலுள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களிலிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கிறது. 70 ஆண்டுகளில் 3 கோடி வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தநிலையில், இந்த 2 ஆண்டுகளில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நரேந்திரமோடி பெருமைபட தெரிவித்துள்ளார். நிச்சயமாக இது பெருமைக்குரியது. தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்குமுன்பு மாநிலஅரசின் நிதிஆதாரத்தை கொண்டு வழங்கப்பட்ட குடிநீர்குழாய் இணைப்புகளையும் சேர்த்தால் 45 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை குடும்பங்களில் 10 சதவீத தொகையை வழங்குவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மாநிலஅரசின் நிதிஆதாரத்திலும் 40 சதவீத தொகை வழங்கப்படவேண்டும் என்பதும் சற்று கடினமானதாகும்.

எனவே, முழுக்க முழுக்க மத்தியஅரசின் திட்டமாக, மத்தியஅரசின் முழு பங்களிப்போடு செயல்படும் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் பொதுவான கருத்தாக இருக்கிறது. தமிழ்நாடு, மணிப்பூர், குஜராத், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்திய தலா ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்களுடன் அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தியன்று பிரதமர் நரேந்திரமோடி காணொலிமூலம் உரையாற்றினார். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் நரேந்திரமோடி கலந்துரையாடினார். இந்த கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிமன்ற தலைவர் சுதாவிடம், ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி, ‘‘தமிழகத்துக்கு பல ஆண்டுகளாக நான் வந்துகொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை நான் எப்போதும் கவுரவமாக பார்க்கிறேன். ஆரணி பட்டின் பெருமையை கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி சொல்லுங்கள்’’, என்று கூறி, அதைப்பற்றி கேட்டுவிட்டு, இத்திட்டத்தால் அனைத்து வீடுகளுக்கும் உள்ள தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிட்ட காரணத்தால், அவர்கள் தங்கள் பட்டுத்தறி நெசவுபணியில் கூடுதலாக நேரத்தை செலவிடமுடிகிறது என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்துகொண்டார்.

இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்துக்கு தனிநபரோ, நிறுவனங்களோ, நன்கொடையாளர்களோ, அவர்கள் இந்தியாவில் இருந்தாலும்சரி, வெளிநாடுகளிலும் இருந்தாலும்சரி நன்கொடை அளிப்பதற்காக ‘ராஷ்டிரிய ஜல்ஜீவன் கோஷ்’ என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துவைத்தார். மொத்தத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதென்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கான நீர்ஆதாரங்களை பெருக்குவதற்காகவும், மத்தியஅரசு சிறப்புத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஏனெனில் நீர்ஆதாரம் இருந்தால்தான் தண்ணீர்வளம் பெருகும். தங்குதடையின்றி விவசாயத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யமுடியும்.

Next Story