மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!


மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
x
தினத்தந்தி 19 Oct 2021 7:09 PM GMT (Updated: 19 Oct 2021 7:09 PM GMT)

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ‘‘கரணம் தப்பினால் மரணம்’’ என்ற நிலையிலேயே கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின்நிலை இப்போது உள்ளது. கடந்த வாரம் புதன்கிழமைகூட நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்க 2 எந்திரப்படகுகளில் சென்ற 23 மீனவர்களை சர்வதேச எல்லையைத்தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாக இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் 28-ந்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்து படகுகளையும் மீட்டுத்தர பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இலங்கை கடற்படை மட்டுமல்லாமல், இப்போது இலங்கை வடமாகாண மீனவர்களாலும் தாக்குதலை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு பக்கம்கூட தமிழக மீனவர்களால் மீன்பிடிக்க செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை தமிழர் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து தொடர்கதையாக, இதுபோன்ற கைது, தாக்குதல் படலங்கள் நடந்துவருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நம்முடைய கடல்பகுதி மிகக்குறுகிய கடல்பகுதியாக இருப்பதால், நமது மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் நுழைய நேரிடுகிறது. ராமேசுவரத்திலிருந்து 12 கடல்மைல் தூரத்தில் சர்வதேச எல்லை வந்துவிடுகிறது. முதல் 3 கடல்மைல் தூரத்துக்கு பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. விசைப்படகுகளுக்கு அனுமதி கிடையாது. 4 முதல் 7 கடல்மைல் தூரத்துக்கு கடலில் பாறையிருப்பதால், நமது மீனவர்கள் அதை தாண்டித்தான் மீன்பிடிக்கச் செல்லவேண்டியிருக்கிறது. ஆக, 8-வது கடல்மைல் எல்லையில் தொடங்கி சற்றுதூரம் சென்றவுடனேயே சர்வதேச கடல் எல்லை வந்து, அதற்கு அடுத்தாற்போல் இருக்கும் ஆழம் அதிகமான சகதி நிறைந்த பகுதிகளில் கிடைக்கும் இறால் மீனை பிடிக்கும்போதுதான், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

இதைத்தவிர்க்க, மத்திய அரசாங்கம் ‘‘நீலப்புரட்சி’’ திட்டத்தின்கீழ் கடலில் தொலைதூரத்துக்கு சென்று மீன்பிடிக்க 2 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மானியத்துடன் வழங்க முடிவெடுத்தது. ஆனால், 3, 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 31 படகுகள்தான் மீனவர்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு காரணம், ‘அரசாங்கம் கொடுக்கும் மானியம் போதாது. மீதமுள்ள தொகையை எங்களால் சொந்தபணம் போட்டு கட்டமுடியாது’ என்பதுதான் மீனவர்களின் ஆதங்கமாகும்.

ஆழ்கடல் படகுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.1 கோடியே 20 லட்சமாகும். இதில் 50 சதவீத தொகையை மத்திய அரசாங்கமும், 20 சதவீத தொகையை தமிழக அரசும், 20 சதவீத தொகையை பயனாளிகளும் பகிர்ந்துகொள்வார்கள். மீதமுள்ள 10 சதவீத தொகையை வங்கி கடன் மூலம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். ஆனால், ஆழ்கடல் மீன்பிடி படகைக்கட்டி, எல்லா சாதனங்களையும் கொண்டு கடலில் இறக்குவதற்கு மீனவர்களுக்கு மேலும் அதிகத்தொகை செலவாகிறது. இது வசதிபடைத்த மீனவர்களால் மட்டுமே முடியும். மேலும், இந்த திட்டம் ராமநாதபுரம், நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பகுதி மீனவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இதை தமிழக மீனவர்கள் அனைவரும் பயன்பட செய்யவேண்டும்.

‘‘இலங்கை கடல்பகுதிக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அங்கே போகாமல், மற்ற பகுதிகளுக்கு எங்களால் செல்ல முடியும். நமது கடல் பகுதிகளில் மீன் குஞ்சுகள் அதிகளவில் வளர்க்கப்படவேண்டும். கடலில் மீன்களுக்கு உணவான கடல் புல், தாவரங்களை அதிகளவில் வளர்த்தால், மீன்வளம் பெருகும்’’ என்பதும் மீனவர்களின் கருத்தாகவே உள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் இந்த பிரச்சினை தொடரும்.. தொடரும்.. என்ற நிலையில் இருக்காமல், முற்றும் என்ற நிலையை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Next Story