இனி சுப்ரீம் கோர்ட்டுதான் நாட்டாமை!


இனி சுப்ரீம் கோர்ட்டுதான் நாட்டாமை!
x
தினத்தந்தி 20 Oct 2021 8:06 PM GMT (Updated: 20 Oct 2021 8:06 PM GMT)

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப்புறங்களில் குறிப்பாக, விவசாயிகள் வாழும் கிராமங்களில் தங்களுக்குள் என்ன பிரச்சினை என்றாலும், ஊர் பஞ்சாயத்தில்தான் மக்கள் முறையிடுவார்கள்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப்புறங்களில் குறிப்பாக, விவசாயிகள் வாழும் கிராமங்களில் தங்களுக்குள் என்ன பிரச்சினை என்றாலும், ஊர் பஞ்சாயத்தில்தான் மக்கள் முறையிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாட்டாமை இருப்பார். அவர் தான் இருபக்க நியாயங்களையும் விசாரித்து, தன் தீர்ப்பை கூறுவார். நாட்டாமையின் தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு முறை நாட்டாமை தீர்ப்பு வழங்கிவிட்டால், அதற்கு ‘அப்பீல்’ கிடையாது. ஒரு சாராருக்கு சாதகமாகவும், மற்றொரு சாராருக்கு பாதகமாக இருந்தாலும் இது நாட்டாமை தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு பிறகு அந்த பிரச்சினையும் முடிவை கண்டுவிடும்.

அதேபோல ஒரு சூழ்நிலைதான் இன்று விவசாயிகள் போராட்டத்தில் விசாரணையை தொடங்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசாங்கம் 3 வேளாண் சட்டங்களை தாக்கல் செய்து, மக்களவையில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதியும், மாநிலங்களவையில் 20-ந்தேதியும் நிறைவேற்றி, அடுத்த ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் உள்பட நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

2020 நவம்பர் 25-ந்தேதி முதல் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கிச்சென்று சாலையில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். கொட்டும் மழை, கடும் பனி, கொளுத்தும் வெயில் என எதுவுமே அவர்கள் போராட்டத்தில் ஒரு சிறு தொய்வையும் ஏற்படுத்தவில்லை. நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக கை கோர்த்தனர். இடையில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்தன. அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடந்தது. எதுவுமே பலனளிக்கவில்லை. விவசாயிகள் மன உறுதியோடு குடும்பம், குடும்பமாக சாலையையே தங்கள் வீடாக்கி, டிராக்டர்களையும் நிறுத்தி வைத்து வயதானவர்கள் அதிலேயே தங்கிக்கொண்டனர்.

இந்தநிலையில், டிசம்பர் 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழுவை அமைப்பதாக கூறி, அந்த குழுவும் தற்போது தன் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இப்போது சட்டங்களும் அமலில் இல்லை. ஆனால் விவசாயிகளை பொறுத்தமட்டில் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டத்தை ‘வாபஸ்’ பெறுவது இல்லை என்பதில் நிலை குலையாத உறுதியோடு இருக்கிறார்கள். அரசாங்கமும் இறங்கி வருவதாக தெரியவில்லை. விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதாக தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில், போராட்டம் தொடங்கி ஒரு ஆண்டை நெருங்கப்போகிறது. இப்படியே போய்க்கொண்டு இருந்தால் இதற்கு என்னதான் முடிவு? எப்படித்தான் தீர்வு காண்பது? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில், இந்த விஷயத்தில் நாட்டாமை ஆக சுப்ரீம் கோர்ட்டுதான் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்றே இதன் மீது தீர்ப்பு வந்துவிடாது என்றாலும், விசாரணை தொடங்கும் நிலையில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க இருக்கிறது.

இவ்வளவு நாளும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்றாலும், போராட்டமே வாழ்க்கை ஆகிவிடமுடியாது. அந்தவகையில், சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்புதான் மத்திய அரசாங்கத்தையும், விவசாயிகளையும் கட்டுப்படுத்தும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு இந்த பிரச்சினை தொடர்பான வழக்கையும், இதுதொடர்பான மற்ற வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, அடிக்கடி தள்ளிப்போடாமல் தொடர்ச்சியாக விசாரணை செய்து, விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோரிக்கையாக இருக்கிறது.

Next Story