100 கோடி தடுப்பூசி - இந்தியாவின் சரித்திர சாதனை!


100 கோடி தடுப்பூசி - இந்தியாவின் சரித்திர சாதனை!
x
தினத்தந்தி 21 Oct 2021 7:43 PM GMT (Updated: 2021-10-22T01:13:29+05:30)

கொரோனா எனும் கொடிய அரக்கனை நம் பக்கம் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியாவைவிட்டு விரட்ட வேண்டும் என்றால், தடுப்பூசிதான் ஒரு பாதுகாப்பான ஆயுதம்.

அந்த வகையில், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி போடும் தகுதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 83 கோடியே 40 லட்சத்து 82 ஆயிரத்து 814 ஆகும். இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்றால், 166 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 628 டோஸ்கள் தடுப்பூசி தேவை.

இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த மலைப்பகுதி, பாலைவனப்பகுதி என்று, ஒரு இடமும் பாக்கியில்லாமல் எல்லா இடங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் எடுத்தன. எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ஆளில்லா குட்டி விமானம் என்று அழைக்கப்படும் “ட்ரோன்கள்” மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. அருணாசலபிரதேசத்தில் மியான்மர் எல்லை பகுதியில் உள்ள சாங்லாங் என்ற இடம் உள்பட பல பகுதிகளுக்கு மருத்துவப் பணியாளர்களை தடுப்பூசிகளோடு விமானம் மூலம் அனுப்பி, அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த நிலையில், நேற்று 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இந்தியா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரை காசநோய், போலியோ போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், 100 கோடி பேருக்கு காசநோய் தடுப்பூசிபோட 32 ஆண்டுகளும், போலியோ தடுப்பூசிபோட 20 ஆண்டுகளும் ஆகின. உலகிலேயே 100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு சீனா என்ற நிலையில், இந்தியா 2-வது நாடாக 100 கோடி தடுப்பூசிபோட்டு புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. 4-ல் 3 இந்தியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டு முடித்திருக்கிறார்கள்.

இந்தியா நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். கடந்த செப்டம்பர் 17-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் அன்று, ஒரே நாளில் 2½ கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. அதாவது, ஒவ்வொரு வினாடியும் 434 தடுப்பூசிகளும், ஒவ்வொரு நிமிடத்திலும் 26 ஆயிரம் தடுப்பூசிகளும், ஒவ்வொரு மணி நேரத்திலும் 15 லட்சத்து 62 ஆயிரம் தடுப்பூசிகளும் போடப்பட்டன. அத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவப் பணியாளர்கள் நாட்டில் தயாராக இருக்கும் நிலையில், இதுவரை தடுப்பூசிபோட விரும்பாத மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி போட்டு, இப்போதைய நிலையில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 52.9 சதவீதம், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 22 சதவீதம் என்ற நிலையை மாற்றி, தகுதியுள்ள அனைவரும் 2 டோஸ் தடுப்பூசியை போட்டுமுடித்து, ஒரு புதிய வரலாற்றை இந்தியா படைக்க வேண்டும்.

எப்படி 100 கோடி தடுப்பூசியை போட்ட சாதனையை பிரதமர் மோடி பாராட்டி பேசும்போது, “100 கோடி தடுப்பூசி என்ற வலிமையான கேடயத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த சாதனையின் பெருமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உரித்தானது. இன்றைய தினம் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது” என்று கூறினாரோ, அதுபோல அனைவருக்கும் தடுப்பூசிபோட்ட சாதனையை விரைவில் ஏற்படுத்த வேண்டும். 100 கோடி டோஸ் தடுப்பூசி போட்டதை பறைசாற்றும் வகையில், டெல்லி செங்கோட்டையில் மிகப்பெரிய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இதற்கான ஒரு சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது. 100 கோடி சாதனை என்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கிறது. நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது.


Next Story