எனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் - மு.க.ஸ்டாலின்


எனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:57 PM GMT (Updated: 2021-10-23T01:27:52+05:30)

மக்களின் வாழ்க்கை என்பது இப்போது மிகவும் பரபரப்பான வாழ்க்கையாகிவிட்டது. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காத நிலையை உருவாக்க வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது.

மக்களின் வாழ்க்கை என்பது இப்போது மிகவும் பரபரப்பான வாழ்க்கையாகிவிட்டது. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காத நிலையை உருவாக்க வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. அனைவரும் போக்குவரத்துக்காக ஏதாவது ஒரு வாகனத்தை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கடந்த 1-9-2021 கணக்குப்படி, தமிழ்நாட்டில் 27,547 அரசு மற்றும் தனியார் பஸ்களும், 4086 மினி பஸ்களும், 3 லட்சத்து ஆயிரத்து 176 ஆட்டோ ரிக்‌ஷாக்களும், 2 கோடியே 65 லட்சத்து 48 ஆயிரத்து 71 இருசக்கர வாகனங்களும், 29 லட்சத்து 66 ஆயிரத்து 503 கார்கள் உள்பட போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என்ற அடிப்படையில் 3 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 184 மோட்டார் வாகனங்கள் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன.

வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது, “போகும் இடத்தை இவ்வளவு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம்” என்று பயண தூரத்தையும், காலத்தையும் கணக்கிட்டே பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் முக்கிய பிரமுகர்கள் சாலையில் செல்கிறார்கள் என்பதற்காக, போக்குவரத்து போலீசார் வாகனங்களை வெகுநேரம் நிறுத்திவிடுவதால், மக்கள் பெரும் பாதிப்பு அடைகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்-அமைச்சர் காரில் செல்கிறார் என்றால், வழிநெடுக 10 அடி தூரத்திற்கு ஆண், பெண் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவதுண்டு. மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், தனக்காக பெண் போலீசார் யாரும் பாதுகாப்புக்காக சாலையில் நிற்கவேண்டாம் என்று கூறிவிட்டார். பல நேரங்களில் போக்குவரத்து போலீசார் முதல்-அமைச்சர் பாதுகாப்புக்காகவும், தங்குதடையில்லாத போக்குவரத்துக்காகவும் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பேரில் போக்குவரத்தை நிறுத்திவிடுகிறார்கள்.

கடந்த 2-ந்தேதி சென்னை அடையாறில் சிவாஜிகணேசன் பிறந்தநாளுக்காக முதல்-அமைச்சர் வருகிற நேரத்தில், ஒரு ஐகோர்ட்டு நீதிபதியின் காரையே தடுப்பு வேலிபோட்டு நிறுத்திவிட்டதை அவரே கோர்ட்டில் சொன்னார். இத்தகைய நிலையில், முதல்-அமைச்சர் இப்போது எல்லோரும் பாராட்டத்தக்க வகையில், ஒரு நல்ல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தான் சாலையில் செல்லும்போது, எந்த போக்குவரத்தையும் நிறுத்தக்கூடாது. சாலையோரம் 10 அடிக்கு ஒரு போலீஸ்காரர் நிற்கவேண்டிய தேவையில்லை. மேலும், முதல்-அமைச்சர் செல்லும்போதெல்லாம் அவரது காரின் முன்னும், பின்னும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் உடன் செல்லும். இதை “சி.எம். கான்வாய்” என்பார்கள். மு.க.ஸ்டாலின் “இசட்” பாதுகாப்பு பிரிவில் உள்ள காரணத்தால், அவர் வாகனத்திற்கு முன்னும், பின்னும் 2 பைலட் வாகனங்கள் செல்லும். இதுதவிர, 3 எஸ்கார்ட் வாகனங்கள், ஒரு ஜாமர் வாகனம் மற்றும் 2 அட்வான்ஸ் பைலட் வாகனங்கள், சென்னை மாநகர போலீசாரின் 4 வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் முதல்-அமைச்சர் காரோடு சென்று கொண்டிருந்தது.

இப்போது முதல்-அமைச்சர், தான் செல்லும்போது 8 வாகனங்களுக்கு மேல் கண்டிப்பாக வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இப்போதெல்லாம் முதல்-அமைச்சரின் கான்வாய் செல்லும்போது, அவருக்கு முன்பு செல்லும் வாகனங்களை சற்று விலகச்செய்து கான்வாய் செல்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதுபோல கான்வாய் சென்றபிறகு ஓரிரு நிமிடங்களில், அதற்கு பின்னால் மற்ற வாகனங்கள் செல்வதற்கும், எதிரேவரும் வாகனங்களும் எந்த தடையும் இல்லாமல் செல்வதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டும் இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டியிருக்கிறது. மு.க.ஸ்டாலினின் இந்த ஏற்பாடுகளால், இப்போதெல்லாம் சாலையில் பொதுமக்களின் வாகனங்கள் அதிகநேரம் நிறுத்தப்படுவதும் இல்லை. மக்களோடு மக்களாக சாதாரணமாக செல்லும் முதல்-அமைச்சரின் வாகனத்தை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். மேலும், முதல்-அமைச்சருக்கு வணக்கம் செலுத்தும்போது, அவர் பதில் வணக்கம் செலுத்துவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மொத்தத்தில் முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டை, வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story