தடுப்பூசி போட இனி தயக்கம் வேண்டாமே!


தடுப்பூசி போட இனி தயக்கம் வேண்டாமே!
x
தினத்தந்தி 25 Oct 2021 10:18 PM GMT (Updated: 25 Oct 2021 10:18 PM GMT)

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற, தடுப்பூசி எனும் கவசம் மட்டுமே அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டாலும், அதன் வேகத்தை அதிகரிக்க வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன.

ஆனாலும், தடுப்பூசி போடும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான் உள்பட 8 மாநிலங்களுக்கு பிறகுதான் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசிபோட தகுதிபடைத்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். இவர்களுக்கு 2 டோஸ் போடவேண்டும் என்றால், 11 கோடியே 57 லட்சத்து 92 ஆயிரம் எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டாக வேண்டும். ஆனால், ஜனவரி மாதம் 16-ந்தேதி தடுப்பூசிபோட தொடங்கி நேற்று முன்தினம் வரை 5 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 291 டோஸ்கள்தான் போட்டு முடிக்கப்பட்டுள்ளது. 46 லட்சத்து 93 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. இன்னும் போகும்பாதை வெகுதூரம் இருக்கிறது. மூத்த குடிமக்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிகூட போடவில்லை. இப்போது 6 மெகா முகாம்கள் நடத்தி தடுப்பூசிபோடும் வேகத்தை தொடர்ந்து அதிகரிக்க தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்த முதல் மெகா முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அதன்பிறகு நடந்த 5 மெகா முகாம்களிலும், அந்த அளவு எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படவில்லை. கடந்த சனிக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் முதல் டோஸ் போட்டவர்களின் சராசரி 76 சதவீதம். 2 டோஸ் போட்டவர்களின் சராசரி 31 சதவீதம். ஆனால், தமிழ்நாட்டில் முதல் டோஸ் போட்டவர்களின் சராசரி 69 சதவீதம். 2 டோஸ் போட்டவர்களின் சராசரி 29 சதவீதம்.

தடுப்பூசிபோட ஆர்வம் உள்ளவர்கள் எல்லோரும் தடுப்பூசிபோட்டு முடித்துவிட்டார்கள். சிலர், நடிகர் விவேக் தடுப்பூசிபோட்ட அடுத்தநாளே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததை காரணம் காட்டியும், வேறு சிலர், சிறுசிறு சாக்குபோக்குகளை சொல்லியும் தடுப்பூசிபோடாமல் இருந்து வருகிறார்கள்.

நடிகர் விவேக், மரக்கன்று நடுதல், ஏழை எளியவர்களுக்கு உதவுதல் உள்பட தன் படங்களில் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவைக்கும் ஆற்றலையும் படைத்தவர் என்று தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கடந்த ஏப்ரல் 15-ந்தேதி அன்று தடுப்பூசிபோட்டவுடன், “எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தவர். ஆனால், அவரது மரணம், மக்களுக்கு தடுப்பூசி மேல் பெரிய பயத்தை ஏற்படுத்தியதுடன், தடுப்பூசிபோடும் வேகத்தையும் குறைத்துவிட்டது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கொரோனா தடுப்பூசிபோட்டால் ஏற்படும் எதிர் விளைவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு நடிகர் விவேக்கின் உயிரிழப்புக்கான காரணங்களை ஆராய்ந்து, அவருடைய சாவுக்கு கொரோனா தடுப்பூசிபோட்டது காரணம் அல்ல. அவருக்கு இருந்த உயர் ரத்த அழுத்தம், அதன் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு, தேவையான அளவு ஆக்சிஜனை “பம்ப்” செய்ய இதயம் நிறுத்தியது, இதய துடிப்பு போதுமான அளவு இல்லாதது என்பது போன்ற காரணங்களை தெரிவித்துள்ளது. ஆக, நடிகர் விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்பது, மக்களுக்கு இனி தயக்கத்தை போக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பல சமூக சீர்திருத்தங்களுக்கு காரணமான நடிகர் விவேக்கின் நடிப்பு, சமூக சேவை போன்றவை போல அவரது மரணத்துக்கு காரணமான மத்திய அரசாங்க அறிக்கையும், தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்தை அகற்றும் என்பதால் அந்த வகையிலும் அவரது நினைவை தமிழ்நாடு நெஞ்சில் நிறுத்துகிறது.


Next Story