பிரதமர் சொன்ன தீபாவளி பாடம்!


பிரதமர் சொன்ன தீபாவளி பாடம்!
x
தினத்தந்தி 26 Oct 2021 8:40 PM GMT (Updated: 26 Oct 2021 8:40 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 22-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதும், 24-ந்தேதி “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றியபோதும், தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது மக்கள் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளை பாடமாக, ஆலோசனையாக வழங்கியுள்ளார்.

2 உரைகளிலுமே, இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டது குறித்து, மிகப்பெருமையாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

“130 கோடி இந்திய மக்களின் அர்ப்பணிப்பால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது. இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி. நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வெற்றி” என்று கூறிய பிரதமர், “இதன் மூலம் நாட்டில் புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி திட்டத்தின் வெற்றி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றுகிறது. அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியை பிரதிபலிக்கிறது” என்றார். மேலும், “தீபாவளி பண்டிகை நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கவேண்டும். உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். அனைவரின் முயற்சியாலும் இதை எல்லோராலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறிய அவர், “உள்ளூர் பொருட்களை வாங்கினால் நம்முடைய பண்டிகைகளும் பிரகாசிக்கும். ஒரு ஏழை சகோதர - சகோதரி, ஒரு கைவினைஞர், ஒரு நெசவாளியின் வீட்டிலேயும் மகிழ்ச்சி வெள்ளம் பாயும். உள்ளூர் பகுதியில் விற்கப்படும் உள்ளூர் பொருட்களை வாங்கி உதவவேண்டும்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், “கடந்த தீபாவளியை நினைத்து பார்த்தால், அப்போது எல்லோர் மனதிலும் பதற்றம் இருந்தது. 100 கோடி தடுப்பூசிகளால் இந்த தீபாவளியில் நம்பிக்கை உணர்வு தழைத்துள்ளது” என்று கூறிவிட்டு, தடுப்பூசி ஒரு கவசம், ஆனால் அந்த கவசம் பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதத்தை கொடுத்தாலும், போர் நடக்கும்போது ஆயுதங்களை யாரும் கைவிடுவதில்லை. அதுபோல, தீபாவளியை மிக எச்சரிக்கையுடன் கொண்டாடவேண்டும். ஆயுதமான முககவசத்தை அணிந்துகொள்ளவேண்டும். நாம் வெளியே செல்லும்போது, காலணிகளை அணிவதுபோல, முககவசங்களையும் அணியவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமரின் அறிவுரை என்பது, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட தேவையான ஒன்றாக இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக, துணி எடுப்பதற்காக கடை வீதிகளுக்கு சென்றவர்களின் கூட்டம் தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியை பார்க்கவே முடியாமல், கூட்டம் நிரம்பிவழிந்தது. முககவசம் போடுவதற்கு மறந்துவிட்டார்களோ? என்று நினைக்கும் அளவுக்கு, நிறைய பேர் முககவசம் அணியவில்லை.

தடுப்பூசி போட்டவர்களுக்கே, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், “சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும், எப்போதுமே யாரும் கடை வீதிக்கு வரமாட்டோம்” என்ற உறுதிமொழியை மக்களும் எடுத்துக்கொள்ளவேண்டும். காவல் துறை, உள்ளாட்சி துறை போன்ற அரசுத் துறைகளும் இதில் மிக கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இந்த ஆண்டு பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடி, கொரோனா யாருக்கும் பரவி விடாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டோம் என்றால், இப்போது குறைந்து கொண்டிருக்கும் கொரோனா இன்னும் தொடர்ந்து அதிகமாக குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஆண்டு எச்சரிக்கையோடு தீபாவளியை கொண்டாடினால், அடுத்த ஆண்டு நிச்சயமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீபாவளியை கொண்டாட முடியும். எப்படி நரகாசூரனை கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்து வதம் செய்தாரோ, அதுபோல கொரோனா எனும் கொடிய அரக்கனை கொல்ல அனைவரும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

நன்றாக குறைந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, தீபாவளி கூட்டத்தினால் மீண்டும் விசுவரூபம் எடுத்துவிடாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கடமை மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அரசும் இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை அடுத்த சில நாட்களுக்கு, அடுத்தடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.


Next Story