பெண்கள் வாக்குகளை பிரியங்கா காந்தி கவர்வாரா?


பெண்கள் வாக்குகளை பிரியங்கா காந்தி கவர்வாரா?
x
தினத்தந்தி 28 Oct 2021 2:26 AM GMT (Updated: 28 Oct 2021 2:26 AM GMT)

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. இன்று எல்லா துறைகளிலும் ஆணுக்கு பெண் நிகராய் வந்துவிட்ட நிலையில், சட்டங்கள் நிறைவேற்றும் பொறுப்பிலுள்ள சட்டசபை, நாடாளுமன்றத்தில் மட்டும் பெண்கள் பங்கு மிகக்குறைவாகவே இருக்கிறது.

பெண்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33.33 சதவீத இடம் ஒதுக்க சட்டம் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அரசியல் கட்சிகளும், பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக பேசிவருகிறார்களே தவிர, தேர்தல் நேரத்தில் வேட்பாளர் தேர்வின்போது, பெண்களுக்கு கணிசமான அளவு இடம் ஒதுக்க முன்வருவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, இன்று 21, 22 வயது இளம்பெண்கள் முதல் 90 வயது மூதாட்டி வரை ஊராட்சி மன்றங்களை அலங்கரித்து வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், மிகப்பெரிய மாநிலமான 403 சட்டசபை தொகுதிகளைக்கொண்ட உத்தரபிரதேசத்தில், 14 கோடியே 43 லட்சத்து 16 ஆயிரத்து 893 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2017-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 312 இடங்களில் வெற்றிவாகை சூடியது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 80 இடங்களில், பா.ஜ.க. 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இந்தநிலையில், ஏற்கனவே உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயிகள் போராட்டம் தீவிரமாகும் நிலையில், சமீபத்தில் லக்கிம்பூர் கேரி என்ற ஊரில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த மோதலில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டதும், அங்கே கிடந்த குப்பை கூழங்களை அவரே துடைப்பம் கொண்டு அகற்றியதும் மக்களுடைய கவனத்தை ஈர்த்தது.

இத்தகைய காலகட்டத்தில், இப்போதே பெண்களின் ஓட்டுகளை கவர பிரியங்கா காந்தி முழு மூச்சில் தன் முயற்சிகளை தொடங்கிவிட்டார். “காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீதம் பேர் பெண்களாகவே இருப்பார்கள்” என்று அவர் அறிவித்தார். அடுத்த 2 நாட்களில், “உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், பிளஸ்-2 படித்த மாணவிகள் அனைவருக்கும் ஸ்மார்ட் போனும், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டரும் வழங்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்கள் ஓட்டுகளை கவருமா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

ஆனால், பெண்களுக்கு 40 சதவீத இடம் ஒதுக்கப்படுவதாக இப்போது பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார். 1998-ம் ஆண்டிலேயே அவரது தாயார் சோனியாகாந்தி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான பதவிகள் அனைத்திலும் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். 23 ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி காற்றிலே கலந்த கீதமாகிவிட்டது. 99 பேர் கொண்ட காங்கிரஸ் செயற்குழுவில் அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதுபோல பல பதவிகளில் 33 சதவீதம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

எனவே, பிரியங்கா காந்தி சொல்வதுபோல 40 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படுமா? என்பது உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை பார்த்தால்தான் தெரியும்.


Next Story