வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி!


வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி!
x
தினத்தந்தி 28 Oct 2021 7:38 PM GMT (Updated: 2021-10-29T01:08:39+05:30)

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை பெருக்கி அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டே, தடுப்பூசி பற்றாக்குறை நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது தர்ம சிந்தனைதான்.

கொரோனா வைரசை ஒழிக்க தடுப்பூசி ஒன்றுதான் சாலச்சிறந்தது என்ற வகையில், கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் 100 சதவீதம் 2 டோஸ் தடுப்பூசிபோடும் சூழ்நிலையை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 104 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 873 பேர் தடுப்பூசிபோட்டு இருக்கிறார்கள். இதில், 72 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரத்து 151 பேர் முதல் டோசும், 31 கோடியே 70 லட்சத்து 2 ஆயிரத்து 722 பேர் 2 டோசும் போட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தமட்டில், 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் 18 வயதை கடந்த தடுப்பூசி போட தகுதியானவர்கள். அதன்படி, 11 கோடியே 57 லட்சத்து 82 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்குவேண்டும். ஒரு டோஸ் போட்டவர்கள் 4 கோடியே 7 லட்சத்து 11 ஆயிரத்து 31 பேர். 2 டோஸ் போட்டவர்கள் ஒரு கோடியே 64 லட்சத்து 45 ஆயிரத்து 973 பேர். அப்படி கணக்கிட்டால், இன்னும் 5 கோடியே 86 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஜனவரி 20-ந்தேதி ‘தடுப்பூசி நட்பு’ என்ற பெயரில் பூடான், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது சமமாக இருக்கவேண்டும் என்ற ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் அடிப்படையிலும், நன்கொடையாக வழங்கிய வகையிலும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதிவரை 3 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 26 நாடுகளுக்கு 3 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மிக அதிகம் ஏற்பட்டு, 2-வது அலை கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தநிலையில், ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

இந்த மாதத்திலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஏற்கனவே அறிவித்திருந்தார். “அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 100 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும்” என்று அவர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த 100 கோடி டோஸ்களையும் இந்தியாவில் இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டு முடித்தபிறகு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முடிவை எடுத்திருந்தால் மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும் என்பது ஒரு விமர்சனம்.

ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதுபற்றி கூறும்போது, “ இந்தியாவில் இப்போது நமது மக்களுக்கு தேவையான அளவுக்கு மேல் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் வந்துவிட்டது. அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கும் எல்லையை நெருங்கிவிட்டோம். பக்கத்து நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிபோட்டு முடிக்கவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து. ஆப்பிரிக்காவில் உள்ள 43 நாடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இப்போது மத்திய அரசாங்கம் பெரியளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்போவதில்லை. உலகில் தடுப்பூசி இல்லாத நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும்நாடுகள் தடுப்பூசியை பகிர்ந்து அளிக்கவேண்டும் என்ற வகையில் ‘கோவேக்ஸ்’ என்ற ஒப்பந்தம் இருக்கிறது. இது உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கை. இதை இந்தியாவும் நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ‘பகிர்ந்து உண்டு வாழ்’ என்ற பண்பாட்டின் அடிப்படையில்தான் ஏற்றுமதி செய்ய மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதே தவிர, நமக்கில்லாமல் அனுப்பப்போவதில்லை. இந்தியாவிலும் தடுப்பூசி உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அண்ணாமலையின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை பெருக்கி அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டே, தடுப்பூசி பற்றாக்குறை நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது தர்ம சிந்தனைதான். வரவேற்புக்குரியது.

Next Story