வரி வசூல் உயர்ந்தது, வேலைவாய்ப்பு உயரவில்லையே!


வரி வசூல் உயர்ந்தது, வேலைவாய்ப்பு உயரவில்லையே!
x
தினத்தந்தி 5 Nov 2021 7:56 PM GMT (Updated: 2021-11-06T01:26:45+05:30)

பொதுவாக நாட்டில் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது என்றால், அதன் அளவீடு வரி வசூல் உயர்விலும், வேலைவாய்ப்பு அதிகரிப்பிலும், தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருக்கத்திலும்தான் எதிரொலிக்கும்.

பொதுவாக நாட்டில் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது என்றால், அதன் அளவீடு வரி வசூல் உயர்விலும், வேலைவாய்ப்பு அதிகரிப்பிலும், தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருக்கத்திலும்தான் எதிரொலிக்கும். வரி வசூல் கூடினாலே, உற்பத்தி உயர்ந்திருக்கிறது, ஏற்றுமதி-இறக்குமதி அதிகரித்திருக்கிறது, வணிகம் தழைத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும். இதோடு வேலைவாய்ப்பு உயர்ந்தால்தான் தனிநபர் குடும்பங்களில் வாழ்வாதாரம் சிறக்கும்.

கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு முதல், நாட்டின் வரி வசூலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பல வர்த்தக நிறுவனங்கள், வியாபாரம் சரிந்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது. குறு, சிறு, நடுத்தர தொழில்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால், பல தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்தன அல்லது மூடப்பட்டன. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்கள் வீடுகளில் வறுமை தாண்டவமாடியது.

இப்போது, கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி உயர்கிறது. இதனால், சரக்கு சேவை வரி வசூல் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடியாக அதிகரித்தது. சரக்கு சேவை வரி அமல்படுத்திய 2017-ம் ஆண்டு ஜூலை முதல் மாதா மாதம் சரக்கு சேவை வரி வசூலை கணக்கிட்டால், இது 2-வது அதிக வரி வசூலாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வசூலானது. எப்படி அக்டோபர் மாத வரி வசூல் செப்டம்பர் மாத உற்பத்தி மற்றும் வணிகவரி காரணமாக கிடைத்ததோ, அதுபோல கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வசூல் என்பது நிதியாண்டின் கடைசியான மார்ச் மாதத்தில் எல்லோரும் கணக்கு முடிக்க அவசர அவசரமாக கட்டிய தொகைதான் காரணமாகும்.

இதுமட்டுமல்லாமல், சரக்கு சேவை வரி கவுன்சில் மற்றும் சம்பந்தப்பட்ட துறை வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்காணித்து, அவ்வப்போது அனுப்பிய செய்திகள், மின்னணு பில் முறை ஆகியவையும் வசூலை உயர்த்தியது. சரக்கு சேவை வரி உயர்ந்திருக்கிறது என்றால், அதன் காரணம் முந்தைய மாதத்தில் உற்பத்தி அதிகரித்திருப்பது, சேவைகள் கூடியிருப்பது, ஏற்றுமதி-இறக்குமதி மேலோங்கியிருந்ததும் தான். கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. பெட்ரோல்-டீசல் விற்பனையும் கடந்த ஒரு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி 42 சதவீதமும், இறக்குமதி 63 சதவீதமும் கூடியிருக்கிறது. நிலக்கரி மற்றும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டைவிட 2 மடங்காகவும், சமையல் எண்ணெய் இறக்குமதி 60 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.

இந்த வரி வசூல் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கும். ஆனால், மோட்டார் வாகன உற்பத்திக்கு மிக அவசியமான ‘‘செமி கண்டக்டர்’’ பற்றாக்குறையால், அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனையும் பெருமளவில் சரிந்துள்ளது. ‘‘செமி கண்டக்டர்’’ மட்டும் தேவையான அளவு கிடைத்திருந்தால், எல்லா மோட்டார் வாகன உற்பத்தியும் உயர்ந்திருக்கும். சரக்கு சேவை வரியும், இறக்குமதி வரியும் இன்னும் அதிகரித்திருக்கும். இவ்வளவு நல்ல சூழ்நிலையிலும், வேலைவாய்ப்பு எதிர்பார்த்த அளவு உயரவில்லை என்பது ஒரு மனக்குறையாக இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் நகர்ப்புறங்களில் 7.38 சதவீதமும், கிராமப்புறங்களில் 7.91 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. உற்பத்தி, ஏற்றுமதியை பெருக்க இன்னமும் அதிகமாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவதையே முக்கிய நோக்கமாகக்கொண்டு, என்ன காரணத்துக்காக வேலைவாய்ப்பு உயரவில்லை? என்பதை தீவிரமாக ஆராய்ந்து நகர்ப்புறங்களிலும், கிராமப்பகுதிகளிலும் வேலைவாய்ப்பை பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பதே வேலையை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story