இடைத்தேர்தல் முடிவுகளும், பெட்ரோல் - டீசல் விலை குறைப்பும்..!


இடைத்தேர்தல் முடிவுகளும், பெட்ரோல் - டீசல் விலை குறைப்பும்..!
x
தினத்தந்தி 7 Nov 2021 7:48 PM GMT (Updated: 2021-11-08T01:18:56+05:30)

பொதுவாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வந்தாலும் சரி, இடைத்தேர்தல்கள் வந்தாலும் சரி, மக்களுக்கு நலன்பயக்கும் அறிவிப்புகள், தேர்தலுக்கு முன்பும், பிறகும் வெளியிடப்படுவது வழக்கம்.

பொதுவாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வந்தாலும் சரி, இடைத்தேர்தல்கள் வந்தாலும் சரி, மக்களுக்கு நலன்பயக்கும் அறிவிப்புகள், தேர்தலுக்கு முன்பும், பிறகும் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது 13 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்ட அறிவிப்பும் வந்தது.

இந்த தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. போக்குவரத்து சிக்னலில் இருக்கும் மஞ்சள் விளக்குபோல, பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும், பச்சை விளக்குபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரய சமிதி பா.ஜ.க.விடம் தோல்வியடைந்துள்ளது. பா.ஜ.க. ஆளுங்கட்சியாக இருக்கும் இமாசல பிரதேசத்தில், ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும், 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அசாம், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியும், பீகார் மற்றும் மேகாலயாவில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியும் பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியையும், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், மராட்டியத்தில் கிடைத்த தோல்வி பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கும். இமாசலபிரதேச முதல்-மந்திரி தங்களுக்கு கிடைத்த தோல்விக்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணம் என்று கூறியது, பா.ஜ.க.வை சிந்திக்க வைத்தது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 12 முறை பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எத்தனையோ அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தாங்க முடியவில்லை, குறைக்கவேண்டும் என்று அபயக்குரல் எழுப்பியபோதும், மத்திய அரசாங்கம் இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.

2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடைந்த தோல்விக்கு, விலைவாசி உயர்வுதான் காரணம் என்பதை கருத்தில்கொண்டு, நேரத்தை வீணாக்காமல் மக்கள் மனநிலையை மாற்றவேண்டும் என்ற நோக்கில், தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளில், அதாவது தீபாவளி நன்னாள் முதல் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் மத்திய அரசாங்கம் குறைத்துள்ளது. அடிப்படை கலால் வரியை குறைக்கவில்லை. ஆனால், சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல் வரியாக இதுவரை விதிக்கப்பட்ட ரூ.18-ல் பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் மீதான இந்த விலை குறைப்பு பொதுமக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு என்று மகிழ்ச்சி பொங்க மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. விவசாயிகளுக்கு இது உதவிக்கரம் நீட்டும். விலைவாசியை குறைக்கும். பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படச் செய்யும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.100-க்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் குறிக்கோள், மத்திய அரசாங்கத்தின் விலை குறைப்புக்கு பிறகு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரியை குறைத்து இருக்கிறார்கள் என்று எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பட்ஜெட்டிலேயே பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு முழு வலியை போக்காவிட்டாலும், சற்று நிவாரணமாக வலி குறைந்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். இந்த வலியை முழுமையாக போக்க வேண்டும் என்றால், மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இன்னும் பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

Next Story