வெள்ளக் காடாக்கிய கனமழை; ஓடோடி வந்த மு.க.ஸ்டாலின்!


வெள்ளக் காடாக்கிய கனமழை; ஓடோடி வந்த மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 8 Nov 2021 7:55 PM GMT (Updated: 2021-11-09T01:25:44+05:30)

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையைத்தான் தமிழகம் நம்பியிருக்கிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையைத்தான் தமிழகம் நம்பியிருக்கிறது. அதுவும் அதிகமழை பொழியும் வடகிழக்கு பருவமழையைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்நோக்கி இருக்கிறது.

வடகிழக்கு பருவமழையை பொருத்தமட்டில், “பெய்தால் பெருவெள்ளம், குறைந்தால் வறட்சி” என்ற நிலைதான் இருக்கிறது. அந்தவகையில், 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் ஒரே நாளில் 29 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு, 2016-ல் 15 செ.மீ., 2017-ல் 18 செ.மீ., 2018 மற்றும் 2019-ல் தலா 15 செ.மீ., 2020-ல் 16 செ.மீ. மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி தொடங்கியது. அப்போது முதல், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த சனிக்கிழமை முதல் சென்னை மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் 1¾ மணிவரை வானத்திலிருந்து அருவிபோல மழை கொட்டியது. அந்த ஒரேநாளில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை பெய்த மழையை கணக்கிட்டால், தமிழ்நாட்டில் வழக்கமான அளவைவிட 43 சதவீதம் கூடுதல் பெய்துள்ளது.

ஏரி, குளம், அணைகள் எல்லாம் நிரம்பிவிட்டதால், அடுத்த ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று மனநிறைவு கொண்டாலும், இனி பெய்யும் மழைநீர் வீணாகக் கடலில் போய் சேருமே என்ற மனக்குறையும் இருக்கிறது. ஏரி, குளங்களின் கரைகளை உயர்த்தி, கொள்ளளவை அதிகரித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கினால், தமிழ்நாடு தண்ணீர் வளமிக்க மாநிலம் என்ற பெயரை பெற்றுவிடுமே என்ற ஆசையும் மக்கள் மனதில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிலையத்திடம், மழை வருவதை துல்லியமாக கணித்துச்சொல்லும் ரேடார்கள் இல்லை என்பது சற்று வருத்தத்திற்குரியது. உடனடியாக, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

சென்னைவாசிகளால் ஒருநாள் மழையையே தாங்க முடியவில்லை. வடகிழக்கு பருவமழை காலம் 2 மாதம் இருக்கும் நிலையில், தொடர்ந்து மழை பெய்தால் என்ன நிலை ஏற்படுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நேற்று முன்தினமும், நேற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருடன் மழை வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டார். முட்டளவு தண்ணீரில் நடந்து சென்றபடியே அதிகாரிகளுக்கு அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகேட்டது மட்டுமல்லாமல், நிவாரண உதவிகளும் வழங்கினார். மேலும், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். இதுபோல, மற்ற மாவட்டங்களிலும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை, திருவள்ளூர், மதுரையில் தயார் நிலையில் உள்ளனர். மழை வெள்ள பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்பு குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவாகிவிட்டதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியை ஒதுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசாங்கம் உடனடியாக உயர்மட்டக் குழுவினரை அனுப்பி, தமிழக அரசிடம் இருந்து அறிக்கை பெற்று போதிய நிவாரண நிதியை அளிக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story