முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்!


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்!
x
தினத்தந்தி 11 Nov 2021 1:24 AM GMT (Updated: 11 Nov 2021 1:24 AM GMT)

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அரசியலாக்கி இரு மாநிலங்களுக்கும் இடையேயான நல்லுறவை பாதிக்க செய்ய வேண்டாமே என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

மு ல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே அரசியல் நுழைந்து, இரு மாநில நல்லுறவுக்கும் முட்டுக்கட்டையாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகும். தமிழ்த்தாயும், கேரள மாதாவும் சகோதரிகள் என்று எல்லோரும் மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சகோதரர்களுக்கு இடையே இதுவொரு பிரச்சினையாகிவிடக்கூடாது.

முல்லைப்பெரியாறு அணை, இருமாநிலத்துக்கும் சம்பந்தம் இல்லாத இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுவிக்கின் சீரிய முயற்சியால் கட்டப்பட்டதாகும். அப்போது, இருமாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது. கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி இருந்தது. இந்த அணை தொடர்பாக 1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி, 999 ஆண்டுகளுக்கு, அதாவது 2885-ம் ஆண்டுவரை செல்லுபடியாகும் வகையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்த காலம் முடிந்ததும், மீண்டும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் மீன்பிடிப்பு, மரங்களை வெட்டுதல், போக்குவரத்துக்காக சாலை அமைத்தல், கல் குவாரி அமைத்து கல் எடுத்தல், தாது பொருட்களை எடுத்துக்கொள்ளுதல் என சென்னை மாகாணத்துக்கு முழு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், குத்தகை தொகையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான், இந்த அணை கேரள பகுதியில் இருந்தாலும் அதை பராமரிக்கும் பணிகள், பயன்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே புது ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஆக, சட்டப்பூர்வமாக எல்லா நடவடிக்கைகளும் முடிந்தபிறகு, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த, அங்குள்ள 15 மரங்களை வெட்டவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு கோரிக்கை விடுத்துவந்தது.

சமீபத்தில், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழகத்தின் மீதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். அவர் எங்கள் கோரிக்கையை ஏற்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். அடுத்தநாளே கேரள வனத்துறை, 15 மரங்களையும் வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினார்.

இந்தநிலையில் அரசியல் உள்ளே நுழைந்து தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, கேரள சட்டசபையில் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க.வும் தன் பங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தது. உடனடியாக கேரள அரசு இந்த 15 மரங்களை வெட்ட வழங்கிய அனுமதியை நிறுத்திவைத்தது. “சம்பந்தப்பட்ட மந்திரிகளிடமோ, முதல்-மந்திரியிடமோ ஒப்புதலை பெறாமல் அதிகாரிகள் மட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முக்கிய முடிவுகளை அதிகாரிகள் மட்டும் எடுக்க முடியாது” என்று கேரள வனத்துறை மந்திரி கூறினார்.

அதிகாரிகளை பொறுத்தமட்டில், எல்லா நடவடிக்கைகளையும் உரிய முறையில்தான் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், இதுதொடர்பாக கேரளா சார்பில் குறிப்பிடும்போது, “பேபி அணையை வலுப்படுத்த பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது என்று செயலாளர்கள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு உரிய முறையில் விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது” என்று தெளிவாக தெரிவித்துள்ளது.

எனவே, அரசியலுக்காக இந்த 15 மரங்களை வெட்டும் அனுமதியை நிறுத்திவைத்திருப்பதை கேரள அரசும் மறுபரிசீலனை செய்யவேண்டும். 15 மரங்களை வெட்டுவது என்பது சாதாரண விவகாரம். இதை ஒரு அரசியலாக்கி இரு மாநிலங்களுக்கும் இடையேயான நல்லுறவை பாதிக்க செய்ய வேண்டாமே என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story