மனிதாபிமானம் கலந்த கடமை!


மனிதாபிமானம் கலந்த கடமை!
x
தினத்தந்தி 14 Nov 2021 7:56 PM GMT (Updated: 14 Nov 2021 7:56 PM GMT)

கடந்த ஒருவார காலமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட வடகிழக்கு பருவமழையின் தொடக்கம், தன் ஆட்டத்தை முடித்து, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒருவார காலமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட வடகிழக்கு பருவமழையின் தொடக்கம், தன் ஆட்டத்தை முடித்து, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த மழையினால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கிநின்றது. பல இடங்களில் தரைத்தளங்களில் தண்ணீர் புகுந்தது. சாலைகளிலும் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில், அரசு எந்திரமே பம்பரமாக சுழன்றது. அதற்கு ஒரு காரணம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணி காட்டிய உற்சாகம்தான். இந்த நிவாரணப்பணிகளில் ஒட்டுமொத்த அதிகாரவர்க்கமே திறன்பட பணியாற்றினாலும், பெண் அதிகாரிகள், குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் எம்.ஆர்த்தி, தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயற்பொறியாளர் ஜி.பி.வைதேகி, மின்வாரிய உதவிப் பொறியாளர் என்.சுமதி, பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் வி.ஹேமமாலினி உள்பட நிறைய பெண் அதிகாரிகள் தண்ணீருக்குள் நடந்துசென்று, தங்கள் பணிகளை ஆற்றினர்.

இந்த வரிசையில், சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, துணிச்சலோடு மனிதாபிமானத்தையும், இரக்கத்தையும் கலந்து ஆற்றிய பணி, எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. டி.பி.சத்திரம் பகுதியிலுள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் வேலை பார்த்துவந்த உதயகுமார் என்ற 28 வயது இளைஞர், பெருமழையில் சிக்கித்தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே கல்லறை மீது சுயநினைவு இல்லாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அப்படியே தூக்கி, தன் தோளில்போட்டு சுமந்துகொண்டு வேகமாக ஓடோடி வெளியே வந்தார். அந்த பக்கமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, தன்னிடம் இருந்த போர்வையையும் கொடுத்து அதில் ஏற்றி, சிலர் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

உதயகுமார் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்துவிட்டாலும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. அர்ப்பணிப்புடன் ஆற்றிய இந்தப்பணியை கேள்விப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். “காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப, கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும் ராஜேஸ்வரி மேற்கொண்ட பணி, காவல் துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும், ஊக்கத்தையும் அளிக்கக்கூடியதாகும். உங்களுடைய சேவைக்கு வாழ்த்துகள். சட்டத்தையும், மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் என்ற முறையிலும், மழைகால பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தவன் என்ற முறையிலும், உங்களின் மனிதாபிமான உயிர்காப்பு பணிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பாராட்டினார்.

முதல்-அமைச்சர் தன் வீட்டுக்கே அழைத்து பாராட்டியதை குறிப்பிட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னை அங்கு உபசரித்த விதமும், ஒரு உறவுக்காரர் முன்பு அமர்ந்திருந்த உணர்வு ஏற்பட்டதையும், நன்றி கலந்த மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்ததில் இருந்து, தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கையாள்வதில் போலீசாருக்கு உதவும் நோக்கில், 1973-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் மகளிர் காவல் அணி தொடங்கப்பட்டது. கடந்த 48 ஆண்டுகளில் நிலைமைமாறி, தற்போது சட்ட ஒழுங்கை பராமரித்தல், குற்றத்தடுப்பு மற்றும் கண்டுபிடிப்பு, போக்குவரத்து சீரமைத்தல் உள்பட அனைத்து வகையான பணிகளையும் மேற்கொள்ளும் வகையில், காவல் துறையில் பெண் போலீசார் ஒரு அங்கமாகவே செயல்பட்டுவருவது தமிழ்நாட்டுக்கு பெருமையளிக்கிறது. அவர்களை வாழ்த்தி, “பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா. பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா” என்று பாரதியார் பாடலைக்கூறி மக்கள் பரணி பாடுகிறார்கள்.

Next Story