மாநில கல்வித் திட்டம் சளைத்தது அல்ல!


மாநில கல்வித் திட்டம் சளைத்தது அல்ல!
x
தினத்தந்தி 15 Nov 2021 7:56 PM GMT (Updated: 2021-11-16T01:26:30+05:30)

நீட் தேர்வு என்றாலே அதில் சி.பி.எஸ்.இ. மாணவர்களால்தான் எளிதில் தேர்வுபெற முடியும் என்ற மாயை இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு முடிவில் தகர்த்தெறியப்பட்டு இருக்கிறது.

நீட் தேர்வு என்றாலே அதில் சி.பி.எஸ்.இ. மாணவர்களால்தான் எளிதில் தேர்வுபெற முடியும் என்ற மாயை இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு முடிவில் தகர்த்தெறியப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் வெற்றி பெற்ற மாணவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்கள்தான். தமிழ்நாட்டை பொறுத்தளவில் மற்ற சில மாநில தேர்ச்சி விகிதங்களைவிட குறைவாக இருந்தாலும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடந்த தேர்வுகளுடன் ஒப்பிட்டால், பரவாயில்லை, இன்னும் அதிகம்வேண்டும் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் நீட் தேர்வை தமிழகத்தில் எழுதினார்கள். அதில் 58 ஆயிரத்து 992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 54.4 சதவீத தேர்ச்சியென்றாலும், கடந்த ஆண்டு 57.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் பார்த்தால், கடந்த ஆண்டு 57 ஆயிரத்து 216 பேர்தான் தேர்ச்சிபெற்றிருந்தனர். நாடு முழுவதும் தரவரிசைப்பட்டியலில் முதல் 50 ஆயிரம் பேரை எடுத்துக்கொண்டால், தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 747 என்று இருந்தநிலையில், இந்த ஆண்டு 2 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளனர். முதல் ஒரு லட்சம் மாணவர்களில் மாநில கல்வித்திட்டத்தில் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கணக்கை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 என்று இருந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு 3 ஆயிரத்து 447 ஆக குறைந்திருக்கிறது. மற்றொரு குறை என்னவென்றால், தரவரிசையில் முதல் 20 பேர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தரவரிசையில் 23-வது இடத்தில் கீதாஞ்சலி என்ற மாணவி 710 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே மதிப்பெண்களை பிரவீன், எஸ்.கே.பிரசெஞ்சிதம், ஆர்.அரவிந்த் ஆகியோரும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ்நாட்டில் முதல் மாணவர்கள் என்று கருதப்படுகிறார்கள். அதற்கடுத்ததாக அர்ஜிதா, எம்.பி.ஹயா கிரிவாஸ் ஆகியோர் 705 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.

டெல்லி, சண்டிகார், கர்நாடகம், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத்தான் தமிழ்நாட்டின் தேர்ச்சிவிகிதம் இருக்கிறது. இந்த மதிப்பீடுகளை பார்த்தால் தமிழக அரசு கல்வித்திட்டத்தில் இன்னும் நிறைய சீர்திருத்தங்களை செய்யவேண்டியது அவசர, அவசியமாக இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த 11 மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக 1,450 மாணவர்களை சேர்க்கக்கூடிய நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக்கல்லூரிகள், சுயநிதிகல்லூரிகள் கணக்கை சேர்த்தால் 9 ஆயிரத்து 100 மருத்துவக்கல்லூரி இடங்கள் மாணவர்களுக்கு இருக்கிறது. இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 3 ஆயிரத்து 750 இடங்களில் 15 சதவீதமும், 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,450 இடங்களில் 15 சதவீதமும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும்.

புதிய மருத்துவக்கல்லூரி என்பதால் அகில இந்திய மாணவர் ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர முன்வரமாட்டார்கள். எனவே, அந்த இடம் நமது மாணவர்களுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வளவுக்கும் தமிழக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள் மாற்றப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வை எழுதினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு தேர்ச்சியில்லை என்பதால் தமிழக அரசின் கல்வித்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளையும் இன்னும் சீரியமுறையில் வழங்கவேண்டும். மற்ற மாநில கல்வித்திட்ட மாணவர்களெல்லாம் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளநிலையில், தமிழ்நாட்டிலும் குறிப்பாக மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள், அதிலும் குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் இன்னும் அதிகளவில் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கைகளை அரசின் பள்ளிக்கூட கல்வித்துறை எடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story