வீணாகும் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசுக்கு பயன்படுத்தலாமே!


வீணாகும் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசுக்கு பயன்படுத்தலாமே!
x
தினத்தந்தி 16 Nov 2021 7:59 PM GMT (Updated: 16 Nov 2021 7:59 PM GMT)

இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற உயிரியல் பேராசிரியர் ஏரன் சேகல். இவர், பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர்.

இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற உயிரியல் பேராசிரியர் ஏரன் சேகல். இவர், பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர். சமீபத்தில் அவர், கொரோனா தடுப்பூசியில் 3-வது டோஸ் (பூஸ்டர்) ஆச்சரியப்படத்தக்க விதமாக பாதுகாப்பு அளிப்பதற்கு உறுதியான சான்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதிலுமே இப்போது, ஒரு பக்கம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், பல நாடுகளில் 3-வது டோஸ் போடும் பணி தொடங்கிவிட்டன. குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் மூத்த குடிமக்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு, 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டால், பூஸ்டர் டோஸ் போடும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. பல நாடுகளில் குழந்தைகளுக்கும் தடுப்பூசிபோடும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்தியாவில் 6 மாதங்களுக்கு முன்பு, அதாவது மே மாதம் 11-ந்தேதிக்கு முன்பு, ஏறத்தாழ 3 கோடியே 60 லட்சம் பேருக்கு மேல் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். அதில், 50 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாகவும், மருத்துவ பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதேபோல, ஜனவரி 16-ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆரம்ப காலத்தில் முதல் டோஸ் போடுவதற்கும், 2-வது டோஸ் போடுவதற்கும் உள்ள இடைவெளி 28 நாட்கள் என்று இருந்ததால், அனைவருமே 28 நாட்களில் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுவிட்டனர். தடுப்பூசியின் செயல்திறன் 6 மாதம் முதல் 8 மாதம் வரைதான் இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால், இப்போது தொடக்க காலங்களில் தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்களை கடந்துவிட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், சிங்கப்பூர் இப்போது ஒரு எச்சரிக்கையை தந்துள்ளது. அக்டோபர் மாத கடைசியில் சிங்கப்பூரில் 80 சதவீத மக்கள் 2 டோஸ் தடுப்பூசியை போட்டுமுடித்துவிட்டார்கள். ஆனால், இப்போது அங்கே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. 2 டோஸ் போட்டவர்களுக்கு கொரோனா வந்தால், பாதிப்பும் அதிகம் இருக்காது, உயிரிழப்பும் அதிகம் இருக்காது என்றாலும், அது வராமலேயே தடுக்கவேண்டும் என்றால், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் 6 மாதங்களை கடந்தவர்களுக்கு உடனடியாக பூஸ்டர் டோஸ் போடுவதே சாலச்சிறந்ததாகும்.

சமீபத்திய நிலவரப்படி, இந்தியா முழுவதும் 19 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 996 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மாநிலங்களிடம் இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டிலும் 1.31 கோடி தடுப்பூசி டோஸ்கள் அரசிடம் இருக்கிறது. தடுப்பூசிகளை பொறுத்தமட்டில், கோவிஷீல்டு மருந்தை தயாரித்து 9 மாதங்கள்தான் பயன்படுத்த முடியும். கோவேக்சினும் 9 மாதங்கள்தான் என்று இருந்த நிலையில், இப்போது ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி தினமும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, தடுப்பூசிகள் காலாவதியாவதை தடுப்பதற்கும், வீணாவதை தடுப்பதற்கும் சிறந்த வழி, 6 மாதம் கடந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தொடங்குவதுதான்.

ஒரு தடுப்பூசி குப்பியில் உள்ள மருந்தை வைத்துக்கொண்டு 10 பேருக்கு போடவேண்டும். ஆனால், குப்பியை திறந்தால், அடுத்த 4 மணி நேரத்திற்குள் 10 பேருக்கு போட்டுமுடித்துவிடவேண்டும். இல்லை என்றால், அந்த குப்பியில் மீதமுள்ள மருந்து வீணாகிவிடும். தகுதியுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட அனுமதித்தால் இவ்வாறு வீணாவதை தடுக்க முடியும். எனவே, உடனடியாக மத்திய அரசாங்கம் பூஸ்டர் டோஸ் போடுவதற்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்குமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். முதல் மாநிலமாக எப்போதும் வழிகாட்டும் தமிழக அரசு அதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்பதே மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story