மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு!


மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு!
x
தினத்தந்தி 18 Nov 2021 5:28 AM GMT (Updated: 2021-11-18T10:58:17+05:30)

தமிழகம் முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, மழை வெள்ள பாதிப்பிலிருந்து நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

“சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்... முடிவே இல்லாதது...” என்று ஒரு பாடல் உண்டு. அதேபோலத்தான், தமிழ்நாட்டில், மழை வெள்ளச்சேதம் என்பது ஆண்டுதோறும் தொடர் கதைதான், முடிவே இல்லாதது என்றநிலை இருக்கிறது. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தீவிரமடையும் நேரங்களில், வெள்ளம் ஏற்படுவதும், அதை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதும், நிதி ஒதுக்குவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இதுவரை அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் ஒதுக்கிய நிதி முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால், மழைவெள்ள பாதிப்பே வந்திருக்காது.

2005, 2015-ம் ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை இப்போது மீண்டும் பெரும் பாதிப்பை கண்டுகொண்டிருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி, அப்போது கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், சட்டசபையில் ஆற்றிய உரையின்போது, “பொதுமக்களுக்கு இயற்கை பேரிடர் தொடர்பான செய்திகளையும், எச்சரிக்கை தகவல்களையும் சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காக புதிய தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அரசுசாரா அமைப்புகள் உள்பட சுற்றுப்புறத்தில், முதலில் உதவக்கூடியவர்களுக்கு பேரிடர் காலத்தில் ஆரம்பக்கட்ட மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுனர்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

வெள்ள பாதிப்புக்குள்ளாகும் 4,133 இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நேரத்தில் தூர்வாருதல், வடிகால் அமைப்புகளை கட்டமைத்தல், தடுப்பு சுவர்களை கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது, சென்னையிலும், சில மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இந்த சூழ்நிலையில், கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. 6-ந்தேதி இரவில் மழை பெய்யத் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி முதல் தினமும் காலையும், மாலையும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்ய ஆணையிட்டு வந்தார்.

இந்தநிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.திருப்புகழ் தலைமையில், சென்னை பெருநகர மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்புகழ் பேரிடர் மேலாண்மையில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர். பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திலும், குஜராத் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர். 2017-ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் பணியாற்றும்போது, சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு, “தமிழ்நாடு வெள்ளங்கள்-கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள்” என்ற தலைப்பில் அவர் தாக்கல் செய்த அறிக்கைகளே இப்போதும் வழிகாட்டியாக திகழ்கின்றன. இது ஊதியம் இல்லாத பொறுப்பாகும்.

இந்த குழு விரைவில் கூடி சென்னை நகரம் மழைநீரால் பாதிக்கப்படாத வகையில், புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வுகள் செய்து ஆலோசனை வழங்கும். இதுபோல, டெல்டா மாவட்டங்கள் மீதும் தனிகவனம் செலுத்தி, வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணமாக அமைந்ததே தவிர, நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை.

எனவே, இப்போதைக்கு திருப்புகழ் தலைமையிலான மேலாண்மை குழு சென்னையில் ஆய்வு மேற்கொண்டாலும், தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, மழை வெள்ள பாதிப்பிலிருந்து நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story