விவசாயிகளுக்கும், அரசுக்கும் வேண்டும் அதிக நிவாரண நிதி!


விவசாயிகளுக்கும், அரசுக்கும் வேண்டும் அதிக நிவாரண நிதி!
x
தினத்தந்தி 19 Nov 2021 5:10 AM GMT (Updated: 2021-11-19T10:40:43+05:30)

மத்திய அரசாங்கமும், தமிழகத்திற்கு வழக்கமாக கிள்ளிக் கொடுப்பதைப்போல் அல்லாமல், இந்தமுறை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வேண்டுகோள்.

வடகிழக்கு பருவமழையின் முதல் ஆட்டம் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் பாதிப்பையும், அதில் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது. 49,230 ஹெக்டேர் சாகுபடி நிலங்களும், 526 ஹெக்டேரிலுள்ள தோட்டக்கலை பயிர் சாகுபடி நிலங்களும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டன. கடந்த அக்டோபர் மாதத்தில், வழக்கமாக பெய்யும் மழை அளவைவிட 52 சதவீதம் அதிகமாக பெய்திருக்கிறது. நவம்பரில், முதல் மழையிலேயே 49 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மழை வெள்ளத்தினால் 54 பேர் உயிரிழந்தும், 52 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். அரசு கணக்குப்படி, 701 குடிசைகள் முழுமையாகவும், 2,846 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இதேபோல், 67 வீடுகள் முழுமையாகவும், 2,022 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

“பட்ட காலிலேயே படும்” என்பதற்கு ஏற்ப, மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 13-ந்தேதி வங்கக்கடலில் உருவாகி, நேற்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று சென்னை அருகே கரையை கடக்கிறது. இதனால், நாளை வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெய்த மழையினால் கன்னியாகுமரி மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் தண்ணீர் வடியாத நிலையில், இந்த மழையினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது.

முதல் மழையின்போது டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து கருத்துகேட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அவரும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதை தீவிரமாக ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரி பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவுசெய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருட்கள், அதாவது 45 கிலோ குறுகியகால விதை நெல், 25 கிலோ நுண்ணூட்ட உரம், 60 கிலோ யூரியா, 125 கிலோ டி.ஏ.பி. உரம் வழங்க உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தாலும், இதுபோதாது பாதிப்புக்கேற்ப அதிகமாக வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடையாது என்பதால், மகசூல் இழப்புக்கேற்ப வழங்க வேண்டும். இடுபொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக கொடுத்தால், இடுபொருட்களுடன் விவசாய பணிகளையும் மேற்கொள்ளமுடியும் என்கிறார்கள். தோட்டக்கலை பயிர்களும் 25 மாவட்டங்களில் சேதமடைந்துள்ள நிலையில், அதற்கும் இழப்பீடு வேண்டும், எல்லா மாவட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

இது விவசாயிகளின் கோரிக்கை என்றால், மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு முதலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, நிவாரணம் என்ற வகையில், மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,629 கோடியும், அதில் உடனடி நிவாரணமாக ரூ.550 கோடியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசாங்கமும், தமிழகத்திற்கு வழக்கமாக கிள்ளிக் கொடுப்பதைப்போல் அல்லாமல், இந்தமுறை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வேண்டுகோள். ஆக, மத்திய அரசாங்கம் தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

Next Story