விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!


விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!
x
தினத்தந்தி 19 Nov 2021 7:48 PM GMT (Updated: 19 Nov 2021 7:48 PM GMT)

“உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது” என்ற பழமொழி இன்றைய விவசாயிகளின் நிலைக்கும் சாலப் பொருந்துகிறது.

“உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது” என்ற பழமொழி இன்றைய விவசாயிகளின் நிலைக்கும் சாலப் பொருந்துகிறது. தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லையே என்ற பெரிய குறைபாடு இன்னும் தொடர்கிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, 2022-2023-ம் நிதியாண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இன்னும் அதற்குரிய அறிகுறியே தெரியவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி மக்களவையிலும், 20-ந்தேதி மாநிலங்களவையிலும் மோடி அரசாங்கம் வேளாண் விளை பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது.

ஒருவார காலத்தில், அதாவது செப்டம்பர் 27-ந்தேதி ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 25-ந்தேதி முதல் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் குடும்பத்தோடு டெல்லி சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் பனி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று பருவநிலைகள் மாறிவந்தாலும், அவர்கள் மனம் மாறாமல் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்தனர்.

இடையில் பல சம்பவங்கள் நடந்தன. நீதிமன்றம் உத்தரவின் பேரில், இப்போது இந்த சட்டமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், “முழுமையாக இந்த சட்டங்களை அரசு வாபஸ் பெறும்வரை தங்கள் போராட்டம் ஓயாது, தொடரும்” என்று விவசாயிகள் அறிவித்தனர். தமிழக சட்டசபையிலும் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓராண்டு ஆகிவிட்டதே, விவசாயிகள் போராட்டத்துக்கு என்னதான் முடிவு? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக்கின் பிறந்த நாளான நேற்று, பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, இந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, “இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள் இதை வரவேற்று ஆதரித்தாலும், சில குறிப்பிட்ட பிரிவு விவசாயிகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களும் எங்களுக்கு முக்கியமானவர்கள்தான்” என்று கூறியது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த சட்டம் ரத்து செய்யப்படுவது, விவசாயிகள் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு 406 நாட்களான பிறகு, இதை அரசு திரும்பப் பெறுவதால், அரசுக்கும் நிச்சயமாக தோல்வி என்று சொல்ல முடியாது. தாமதமானாலும், விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்ட வகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஆனால், விவசாயிகளோடு 11 சுற்று பேச்சு வார்த்தை நடந்த நேரத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்புக்குரியதாக இருந்திருக்கும். 11-வது சுற்று பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி 22-ந்தேதி முடிந்த நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, “பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. அதை மனதில் கொண்டுதான் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்கள். விவசாயிகளை பொருத்தமட்டில், “இந்த சட்டங்களை திரும்பப்பெற்றது மகிழ்ச்சி. இதுபோல, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும்” என்பதும் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story