மாசற்ற அலுவலக பயண நாள்!


மாசற்ற அலுவலக பயண நாள்!
x
தினத்தந்தி 21 Nov 2021 7:45 PM GMT (Updated: 21 Nov 2021 7:45 PM GMT)

உலகில் காற்றுமாசு என்பது சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்தாகும். ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் உலகில் காற்றுமாசினால் மரணம் அடைகிறார்கள்.

உலகில் காற்றுமாசு என்பது சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்தாகும். ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் உலகில் காற்றுமாசினால் மரணம் அடைகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆண்டுதோறும் டெல்லியில் குளிர்காலங்களில் காற்றுமாசு அதிகமாக இருப்பது வழக்கம். இதற்கு காரணம், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கோதுமை அறுவடை செய்தபிறகு நிலத்தில் தரையையொட்டி இருக்கும் கழிவுப்பயிர்களை தீயிட்டு கொளுத்திவிடுவார்கள். அந்த புகைமாசு காரணத்தினால்தான் காற்றுமாசு டெல்லியில் ஏற்படுகிறது என்று ஆண்டாண்டுகாலம் சொல்லிவந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி காற்றுமாசுக்கு இந்த புகை பெரிய காரணமல்ல. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள், வாகன புகை மாசு, நிலக்கரியை கொண்டு இயங்கும் அனல்மின் நிலையங்களால் ஏற்படுத்தப்படும் மாசு ஆகியவையும் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது என்று தெரிவித்தது. இந்த காரணங்களை சுப்ரீம் கோர்ட்டு மட்டும் சொல்லவில்லை. பல ஆய்வுகள் காலம் காலமாக தெரிவிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் மந்திரியே, இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்களை பார்த்தால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் புகை மாசு டெல்லியில் 20 சதவீதம் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத்தான் காரணம். மீதமுள்ள 80 சதவீதம் டெல்லியில் ஏற்படும் பிற மாசுதான் காரணம் என்று கூறினார். சமீபத்தில் கான்பூர் ஐ.ஐ.டி., டெல்லி மாசு கட்டுப்பாடு குழு மற்றும் சுற்றுச்சூழல்துறை வெளியிட்ட அறிக்கையில், டெல்லியின் காற்றுமாசுக்கு முக்கிய காரணம் சாலை தூசிதான். ஏறத்தாழ 56 சதவீதம் இந்த சாலைத்தூசியால்தான் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களிலிருந்து வரும் புகைமாசு அதில் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் மட்டுமல்லாது, சென்னையிலும் தற்போது காற்றுமாசு அதிகமாக இருக்கிறது. சென்னையை சுற்றிலுமுள்ள அனல்மின் நிலையங்கள், பெட்ரோலிய பொருட்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களிலிருந்து வரும் புகையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் வாகன புகை, அனல்மின் நிலைய புகை, தொழிற்சாலை புகையும் சேர்ந்து அதிகமாக காற்று மாசை ஏற்படுத்துகிறது. பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகனங்கள் வெளியிடும் மாசுதான் என்று கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. 10 லட்சத்துக்கும்மேல் மக்கள்தொகை இருந்து காற்றின்தரத்தை அடையாத 132 நகரங்களின் பட்டியலில் சென்னையையும் ஒரு நகரமாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருக்கிறது. வாகன புகைமாசை கட்டுப்படுத்த சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், அதன் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் அதாவது புதன்கிழமையன்று மாசற்ற அலுவலக வாரம்-பயணநாள் என்று கடைப்பிடித்து தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் புதன்கிழமையன்று மாசு காட்டுப்பாடு வாரியத்தலைவர் ஏ.உதயன், கோயம்பேட்டிலுள்ள தன் வீட்டிலிருந்து கிண்டியிலுள்ள அலுவலகத்துக்கு சைக்கிளில்தான் வந்தார். அதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரெயிலில் வந்தார். மாசு கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் அனைவரும் சைக்கிள், பஸ், மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில்கள் மூலம் அலுவலகத்துக்கு வந்தார்களே தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார் என்று மோட்டார் வாகனங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. மாசு கட்டுப்பாடு வாரியத்தலைவரே, வாராந்திர மாசு இல்லாத பயணநாளில் சைக்கிளில் வந்தது எல்லா ஊழியர்களுக்கும் உற்சாகத்தை தந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, “மற்ற துறைகளும், தனியார் நிறுவனங்களும் முயற்சி செய்தால் தினமும் 20 சதவீதம் போக்குவரத்து நெரிசலும், காற்றுமாசும் குறையும். இந்த நிகழ்ச்சி குறித்து அரசிடம் எடுத்து சொல்லியிருக்கிறோம். மற்ற துறைகளும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்” என்றார். மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டிவிட்டது. பொதுவாக அரசு ஊழியர்கள்தான் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவகையில், மற்றத்துறைகளும் இதை பின்பற்றினால், பொதுமக்களும் பாடம் கற்றுக்கொண்டு, காற்றுமாசை குறைக்க தங்கள் பங்கை ஆற்றுவதற்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கும்.

Next Story