இவர் ஒரு வீரப் பெண்!


இவர் ஒரு வீரப் பெண்!
x
தினத்தந்தி 23 Nov 2021 7:58 PM GMT (Updated: 23 Nov 2021 7:58 PM GMT)

நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றம் இப்போது வியக்கத்தக்க வகையில் உள்ளது. எல்லா துறைகளிலும் பெண்களின் பணி சிறப்புக்குரியதாக இருக்கிறது.

நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றம் இப்போது வியக்கத்தக்க வகையில் உள்ளது. எல்லா துறைகளிலும் பெண்களின் பணி சிறப்புக்குரியதாக இருக்கிறது. ராணுவத்திலும் இப்போது பெண்கள் ஏராளமாக சேரத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசாங்கம், “பெண்கள் ராணுவக் கல்லூரிகளில் சேரலாம். அவர்கள் நிரந்தர கமிஷன் அதிகாரிகளாக பணிபுரிய தகுதிபடைத்தவர்கள்” என்று தெரிவித்துள்ளது.

14 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தில் 0.56 சதவீதம்தான் பெண்கள் இருக்கிறார்கள். விமானப்படையில் 1.08 சதவீதமும், கப்பல் படையில் 6.5 சதவீதமும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் படித்த 124 ஆண் அதிகாரிகள், 29 பெண் அதிகாரிகள் மற்றும் நட்புறவு வெளிநாடுகளை சேர்ந்த 16 ஆண் அதிகாரிகள், 9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்து மிடுக்காக அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இந்த அணிவகுப்பில் பெண் அதிகாரியான ஜோதி நெயின்வால் நடந்து சென்றதை, பார்வையாளர்கள் வரிசையில் இருந்த அவரது 9 வயது மகள் லாவண்யாவும், 7 வயது மகன் ரேயான்ஷ்சும் கைதட்டி ரசித்தனர். 33 வயதான ஜோதி நெயின்வால் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஒரு போர் விதவை. அவரது கணவர் தீபக் நெயின்வால் ஒரு ராணுவ வீரர். 2018-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளோடு நடந்த மோதலில், குண்டு பாய்ந்து 40 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் உயிரிழந்தார். அந்த நேரம் ஜோதி 4 சுவர்களுக்குள் வாழ்க்கை நடத்திய ஒரு அப்பாவி இல்லத்தரசி. ஜோதியின் தாயார் அவரை துக்கத்தில் இருந்துமீட்க, “இப்போது முதல் உன் வாழ்க்கை உன் குழந்தைகளுக்கான ஒரு பரிசாகும். அவர்கள் உன்னைப்பார்த்து வளரவேண்டும். உன் வாழ்க்கையை எப்படி நடத்தப்போகிறாய்? என்பது உன் கையில்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அப்போதே ஜோதி, “என் கணவர் எந்த ராணுவத்தில் வீரமரணம் அடைந்தாரோ, அதே ராணுவத்தில் நான் அதிகாரியாக சேருவேன்” என்று உறுதியெடுத்தார். ஆனால், தேர்வு நடைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. ஆங்கிலத்திலும் புலமை இல்லாமல் இருந்தார். அவரது கணவர் வேலைபார்த்த படைப்பிரிவு உயர் அதிகாரிகள், அவருக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் கொடுத்து, அவ்வப்போது கேள்விகளும் கேட்டு ராணுவ அதிகாரிகள் தேர்வுக்கு தயார்படுத்தினர். தன் முயற்சியில் சிறிதும் துவளாத ஜோதி தேர்வில் வெற்றிபெற்று, சென்னையில் 11 மாதப்பயிற்சிக்கு பிறகு, இப்போது ராணுவத்தில் “லெப்டினென்ட்” ஆகிவிட்டார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

ஜோதியின் விடாமுயற்சி, வாழ்க்கையில் பல இடர்பாடுகளை சந்திக்கும் பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது. ஒரு வார்த்தையை இழந்தால் மொழி அழிந்துபோவதில்லை. ஒரு ராணுவ வீரர் இறந்தால், நமது ராணுவ சரித்திரம் அத்துப்போவதில்லை. ஒரு வாழை வீழ்கிறபோது, அடிவாழை எழுகிறது. தன் வம்சத்துக்கு தொடர்ச்சி தருகிறது. இங்கு நிகழ்ந்திருப்பது அதைவிட அபூர்வமானது. ஒரு ராணுவ வீரருக்கு தொடர்ச்சியாய், அந்த குடும்பத்திலிருந்து இன்னொரு ஆண் மகன் வருவது புதிதல்ல. ஆனால், இறந்த வீரரின் மனைவியே அதிகாரியாக அந்த இடத்தை நிரப்புவதுதான் அரிதினும் அரிதாகும், பெருமையிலும் பெரிதாகும்.

தன் கணவர் இறந்தபோது, 2 குழந்தைகளோடு தவித்த ஜோதி, சிறிது நாளில் தன் துக்கத்தை தூர எறிந்துவிட்டு, வைராக்கியத்துடன் உழைத்து ராணுவ அதிகாரி உடையை அணிந்துள்ளார். அந்த வீர மகளை எண்ணி இந்திய தாய்க்குலமே பெருமைப்படுகிறது. பெண் குலத்துக்கே வழிகாட்டியாக அந்த வீரப்பெண்மணி திகழ்கிறாள். இந்திய தாய், தன் மகள் ஜோதி மீது ஆனந்த கண்ணீர் சொரிகிறாள். வீரத்திருமகளே உனக்கு எங்கள் வீர வணக்கம் என்று இதயம் சொல்கிறது.

Next Story