பேச்சுவார்த்தையிலேயே இனி தீர்வு காணலாமே!


பேச்சுவார்த்தையிலேயே இனி தீர்வு காணலாமே!
x
தினத்தந்தி 24 Nov 2021 7:44 PM GMT (Updated: 24 Nov 2021 7:44 PM GMT)

விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் எந்திரம் மூலம் உற்பத்தி செய்துவிடலாம்.

விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் எந்திரம் மூலம் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், உண்ணும் உணவு பொருட்களை நிலத்தில் சாகுபடி செய்து விளைவித்தால்தான் பெற முடியும். அதனால்தான், விவசாயிகள் பற்றி மறைந்த கருணாநிதி கூறும்போது, “உழவனோர் தாமரை.. சேற்றில் மலரும் அவன் வாழ்வு. உழவனோர் ஓவியன்.. வயல்கள் அனைத்தும் அவன் வரைந்த சித்திரம். உழவனோர் வீரன்.. என்றும் போர் இருக்கும் அவன் களத்தில் (வைக்கோல் போர்). உழவனோர் மன்னன்.. நாற்று முடி இருக்கும் அவன் தலையில். உழவனோர் தெய்வம்.. பயிர்களை வளர்த்து மக்கள் உயிர்களைக் காப்பதால்” என்று பெருமைபட தெரிவித்து இருந்தார்.

பொதுவாக, தங்கள் கோரிக்கைக்காக வீதிக்குவந்து போராடுவதை வழக்கமாக கொண்டிராத விவசாயிகள், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கினார்கள். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரோடு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கொண்ட கொள்கையில் உறுதியாக, ஒரு ஆண்டாக சாலையிலேயே அமர்ந்து போராடினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கடும் முயற்சி எடுத்தது. மத்திய அரசாங்கமும், “2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்திருக்கிறோம்” என்று கூறியது. ஆனால், சட்டங்கள் ரத்து செய்தால்தான் எங்கள் கோரிக்கை நிறைவேறியதாக அர்த்தம் என்ற உறுதிப்பாட்டோடு, தொடர்ந்து விவசாயிகள் போராடி வந்தார்கள். இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி, தேவ் - தீபாவளி புனித பண்டிகை, சீக்கிய மதகுருவான குருநானக் பிறந்தநாளையொட்டி, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும். இந்த மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை ரத்து செய்வதற்கான அரசியல் அமைப்பு செயல்முறையை செய்து முடிப்போம்” என்று அறிவித்தார்.

இனி போராட்டம் முடிந்து, பிரதமர் கேட்டுக்கொண்டபடி, எல்லா விவசாயிகளும் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எங்களுடைய மற்ற கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை, மின்சார திருத்த மசோதாவை வாபஸ் பெறுதல், விவசாய கழிவுகளை எரிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராத சட்டப் பிரிவுகளை ரத்து செய்தல், பல்வேறு மாநிலங்களில் நடந்த விவசாய போராட்டங்களின்போது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல், லக்கிம்பூர் சம்பவத்துக்காக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து விலக்கி கைது செய்தல், போராட்டத்தின்போது உயிரிழந்த 700 விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குதல், டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்ட நினைவாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப நிலம் ஒதுக்குதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

இதில் கடைசி 3 கோரிக்கைகளும் இப்போது கூடுதலாக சேர்க்கப்பட்டவையாகும். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துவிட்டார்கள். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தபிறகும் உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா?, இனி அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினால் என்ன? என்ற ஒரு கருத்தும் நாட்டில் நிலவுகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசாங்கம் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், இதுகுறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். “போதும் போராட்டம், தொடரட்டும் பேச்சுவார்த்தை. தீர்வு பிறக்கட்டும் மீதமுள்ள கோரிக்கைகளுக்கு” என்பதே பொதுவான மக்களின் உணர்வாக இருக்கிறது.

Next Story