மீண்டும் மத்தியகுழு வரவேண்டும்!


மீண்டும் மத்தியகுழு வரவேண்டும்!
x
தினத்தந்தி 1 Dec 2021 7:51 PM GMT (Updated: 1 Dec 2021 7:51 PM GMT)

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கியது. கடந்த மாதம் 6-ந்தேதி இரவு முதல் மழை வெளுத்துக்கட்டியது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கியது. கடந்த மாதம் 6-ந்தேதி இரவு முதல் மழை வெளுத்துக்கட்டியது. தமிழ்நாடு முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. நடவு செய்யப்பட்ட பயிர்கள் அழுகின. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டன. வீடுகள் இடிந்தன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந்தேதி காலை முதல் இன்று வரை தினமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிட்டுவருகிறார். இன்றும் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

பொதுவாக, மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் பேரிடர் நிவாரண நிதி இருக்கும். தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பேரிடர் நிவாரண நிதி ஏற்கனவே கொரோனாவுக்கும், மற்ற பேரிடர்களுக்கும் செலவழிந்துவிட்டது. இனி மீண்டும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கினால்தான் மழை பாதிப்பிலிருந்து மீளமுடியும். இதனால்தான், தமிழகஅரசு சார்பில், ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் முதற்கட்ட வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கை வழங்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.2,079.89 கோடியும், முதற்கட்ட செலவுக்காக ரூ.549.63 கோடியும் வேண்டும் என்று கோரப்பட்டது.

இதற்கிடையில், தமிழக அரசின் வேண்டுகோளின்படி, மத்திய உள் விவகாரங்கள் அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழு கடந்த 21-ந்தேதி சென்னை வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, தொடர்ந்து 2 குழுக்களாக பிரிந்து சென்னை மற்றும் பல மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நீரில் மூழ்கிய பயிர்களையும் பார்வையிட்டு 24-ந்தேதி டெல்லி திரும்பியது.

அதன்பிறகு, கூடுதலாக சேத விவரங்களின்படி, ஏற்கனவே கூறிய தொகைக்கு மேலாக தற்காலிக சீரமைப்பு பணிக்கு ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.1,475.22 கோடியும் வேண்டும் என கணக்கிட்டு, ஏற்கனவே கூறியதொகைக்கு கூடுதலாக ரூ.1,996.50 கோடி தேவைப்படும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆக, மொத்தம் ரூ.1,070.92 கோடி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும், ரூ.3,554.88 கோடி நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காகவும் வேண்டும் என்ற வகையில், மொத்தம் ரூ.4,625.80 கோடி வழங்க தமிழக அரசு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. “வழக்கம்போல, கேட்ட தொகைக்கு வெகு குறைவான தொகையே வழங்கப்படுவதுபோல, இந்தமுறை வழங்கக்கூடாது. தமிழக அரசு கோரும் தொகையை வழங்கவேண்டும்” என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்தநிலையில், மத்திய குழு வந்துவிட்டு சென்றபிறகு மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தொடர்ந்து மழை பெய்தது. இப்போதும் தொடர் நிகழ்வுகளாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மத்திய குழு வந்து சென்றபிறகு பெய்த மழையினால் மேலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய சேதங்களை பார்வையிட மீண்டும் மத்திய குழு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசும்போது, “மீண்டும் பலத்த மழை தமிழகத்தில் பெய்து வருவதால், மத்திய குழு அனுப்பிய அறிக்கை திருத்தப்படவேண்டும். இதற்காக மீண்டும் மத்திய குழு தமிழகத்திற்கு வரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். மழை தொடர்ந்து பெய்துவருவதால், இப்போது மீண்டும் மத்திய குழு வந்து சேதங்களை பார்வையிடவேண்டும். மழை பெய்து கொண்டிருக்கும்போது, மத்திய குழு வந்தால்தான் உண்மையான சேதங்களை நேரில் பார்வையிட முடியும் என்பது விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்லாமல், தமிழக மக்களின் கோரிக்கையாகவும், தமிழக அரசின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

Next Story