இந்து சமய அறநிலைய துறையின் மறுமலர்ச்சி


இந்து சமய அறநிலைய துறையின் மறுமலர்ச்சி
x
தினத்தந்தி 2 Dec 2021 7:39 PM GMT (Updated: 2 Dec 2021 7:39 PM GMT)

தமிழ்நாடு தொன்றுதொட்டு ஆன்மிக பூமியாக திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்துமத வரலாறுகள் தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கின்றன.

தமிழ்நாடு தொன்றுதொட்டு ஆன்மிக பூமியாக திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்துமத வரலாறுகள் தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கின்றன. ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதையே வாழ்வு நெறியாக கொண்டவர்கள் தமிழக மக்கள். அந்தவகையில் தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 627 கோவில்கள் உள்ளன. இதில் பல கோவில்கள் நல்ல வருமானம் உள்ள கோவில்களாக அனைத்து பூஜைகள், கும்பாபிஷேகங்கள், வழிபாட்டு முறைகள் நடத்துவதற்கு வசதிகள் இருந்தாலும், 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒருகால பூஜைகூட நடத்துவதற்கு வருமானம் இல்லாமலும் அந்த கோவில்களில் பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் வருமானமின்றி தவித்து கொண்டு இருந்த சூழ்நிலை நிலவியது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இறைபக்தியுள்ள பி.கே.சேகர்பாபுவை இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராகவும், டாக்டர் பி.சந்திரமோகனை இந்த துறையின் முதன்மை செயலாளராகவும், ஜெ.குமரகுருபரனை ஆணையராகவும் நியமித்தார். இந்த மூவர் அணி கோவில்களில் பல சீர்திருத்தங்களை செய்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு இந்து கோவில்களின் நலன்மீது அக்கறை கொண்ட அரசு என்பதை ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிரூபித்து வருகிறது. கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவியேற்ற மு.க.ஸ்டாலின், ஜூன் மாதம் 3-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோவில்களில் நிலையான மாதசம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள், அந்தநேரத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவந்த அசாதாரண சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், வருமானமின்றி தவித்தனர். இதை கேள்விப்பட்ட முதல்-அமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாதசம்பளம் பெறாமல் பணியாற்றும் அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டு தொடங்கி வைத்தார். இதன் மூலம் 11 ஆயிரத்து 65 திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெற்றனர்.

இதுமட்டுமல்லாமல், ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி தொடங்கி வைத்தார். கோவில்களில் பணியாற்றும் இவர்களுக்கு மாதவருமானம் இல்லாத சூழ்நிலையில் இந்த தொகை பெரும் உதவியாக இருக்கிறது. இப்போது அந்த திருக்கோவில்களில் ஒருகால பூஜை சிறப்புடன் நடைபெறுவதற்கு வசதியாக அங்குள்ள வைப்புநிதியை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி, அதற்காக ரூ.129 கோடியே 59 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இனி இந்த கோவில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடக்கும். பக்தர்களும் அந்த நேரத்தில் வந்து, வழிபட வருவார்கள் என்ற வகையில், இந்த திட்டம் பக்தர்களின் மனதை குளிர வைத்திருக்கிறது. இது சின்னஞ்சிறு கிராமங்களிலுள்ள சிறியகோவில்களில் இனி கோவில்மணி சத்தம் கேட்பதையும், பூஜைசெய்யும் சத்தம் கேட்பதையும் உறுதிசெய்யும். இன்றைய விலைவாசியில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தில் கிடைக்கும் வட்டி ஒருகால பூஜைக்கு தேவையான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்த சூழ்நிலையில், இப்போது அப்படியே இரண்டு மடங்காக்கி ரூ.2 லட்சமாக முதல்-அமைச்சர் உயர்த்தியதன் மூலம் பூஜை, புனஸ்கார முறைகள் எல்லாம் இனி சிறிதும் தடைபடாமல் நடக்கும் என்று பக்தர்கள் மனம் குளிருகிறார்கள்.

Next Story