மிக மிக எச்சரிக்கை தேவை!


மிக மிக எச்சரிக்கை தேவை!
x
தினத்தந்தி 3 Dec 2021 8:55 PM GMT (Updated: 3 Dec 2021 8:55 PM GMT)

எந்த பொதுஎதிரி இந்தியாவில் நுழையக்கூடாது என்று எல்லோரும் கவனமாக இருந்தநிலையில், எல்லா தடைகளையும் மீறி ஒமைக்ரான் என்ற அந்த எதிரி இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டது.

எந்த பொதுஎதிரி இந்தியாவில் நுழையக்கூடாது என்று எல்லோரும் கவனமாக இருந்தநிலையில், எல்லா தடைகளையும் மீறி ஒமைக்ரான் என்ற அந்த எதிரி இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டது. உலகம் முழுவதையுமே கடந்த 2 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் அடையமுடியாமல், அடைந்த வளர்ச்சியையும் பின்னோக்கி தள்ளிவிட்ட கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் மீண்டு வந்துகொண்டிருக்கின்றன. இனி கொரோனாவை ஒழித்துவிடலாம். பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டது என்று மனநிறைவு கொண்டிருந்தநேரத்தில், கொரோனா வைரசில் ஒரு உருமாறிய கொரோனாவான டெல்டாவிலிருந்து மீண்டும் உருமாறிய ‘ஒமைக்ரான்’ என்று சொல்லப்பட்ட மிகமோசமான கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் காலெடுத்து வைத்தது. எல்லா நாடுகளும் குறிப்பாக இந்தியா உள்பட இந்த புதிய தொற்று தங்கள் நாட்டில் நுழைந்துவிடக்கூடாது என்ற மிகஅதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் இப்போது 32 நாடுகளில் தன் தடத்தை பதித்துவிட்ட நிலையில், இது கொரோனாவை விட 3 மடங்கு அதிகமான வேகத்துடன் பரவும் என்ற வகையில், எல்லோருக்குமே பெரிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதை நுழையவே விட்டுவிடக்கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தநேரத்தில், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் 66 வயதான தென்ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், 46 வயதான அரசு மருத்துவமனை மயக்கநிபுணரான டாக்டர் ஒருவருக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்துக்கொண்டிருக்கிறார். அதில் யாரிடம் இருந்தாவது இந்த தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்குமோ? என்று அஞ்சப்படுகிறது. அந்த டாக்டரோடு தொடர்பிலிருந்த பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு இப்போது கொரோனா ‘பாசிட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இது டெல்டாவா? அல்லது ஒமைக்ரானா? என்பதை கண்டறிய மாதிரிகள் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மிக அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஆண் ஒருவருக்கும், இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த 9 வயது பெண்குழந்தைக்கும், 32 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் டெல்டாவா?, ஒமைக்ரானா? என்று அறிய மரபியல் பரிசோதனைக்காக 2 இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவு தெரியும். ஆக இந்த ஒமைக்ரான் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறும் ஆற்றல்படைத்தது. அந்தவகையில் இங்கேயே உருமாறி இருக்கிறதா? என்பதும் ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும். மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பெங்களூருவில் கண்டறியப்பட்ட 2 ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களும், 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிகவும் லேசான பாதிப்புதான் இருக்கிறது.

ஆக தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஒமைக்ரான் வராது என்று நிச்சயமாக சொல்லமுடியாது. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்காது. இந்த புதிய வைரசிலிருந்து தப்பிக்க ஒரேவழி அனைவரும் தடுப்பூசி போடவேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் ஆனவர்களுக்கும் ‘பூஸ்டர்டோஸ்’ போடவேண்டும். குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உறுதியான பாதுகாப்பு என்றால் முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் என்பதுதான் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பாலும் அதையே தெரிவித்துள்ளார். எனவே அரசும், மக்களும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் ஆகிய அனைவருக்கும் பூஸ்டர்டோஸ் போடுவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டன. இந்திய அரசும் பூஸ்டர்டோஸ் போடுவதற்கான உத்தரவை பிறப்பிக்கவேண்டும். பொதுமக்களும் முககவசம் அணியாமல் வெளியேசெல்லமாட்டேன். சமூக இடைவெளியை பின்பற்றுவேன் என்று உறுதியெடுத்துக் கொண்டால்தான் ஒமைக்ரானிலிருந்து தப்பிக்கமுடியும்.

Next Story