பரிதவிக்க வைக்கும் பஞ்சு நூல் விலை ஏற்றம்


பரிதவிக்க வைக்கும் பஞ்சு நூல் விலை ஏற்றம்
x
தினத்தந்தி 5 Dec 2021 8:11 PM GMT (Updated: 5 Dec 2021 8:11 PM GMT)

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறும் தொழில் என்றால் நெசவுத் தொழில்தான்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறும் தொழில் என்றால் நெசவுத் தொழில்தான். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் இது. அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காக, மறைந்த அறிஞர் அண்ணா தோளில் கைத்தறி துணிகளை சுமந்துகொண்டு விற்ற வரலாறும் இருக்கிறது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் எல்லோருக்குமே மூலப்பொருள் என்றால், அது பஞ்சு நூல்தான். நெசவாளர்களுக்கு மட்டுமல்லாமல், தண்ணீர் வசதியில்லாத நிலங்களில் மானாவாரி பயிரை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பருத்திதான் கைகொடுக்கிறது.

தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற எவ்வளவோ நிலம் இருந்தாலும், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 3.92 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பருத்திக்கான உரிய விலை கிடைக்காததால்தான் விவசாயிகளிடமும் ஆர்வம் இல்லை. பருத்தி பஞ்சு தேவை தமிழகத்திற்கு ஆண்டுக்கு ஒரு கோடியே 10 லட்சம் பொதிகளாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 6 லட்சம் பொதிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வளவுக்கும் இந்தியா முழுவதும் 2,049 நூற்பாலைகள் இருக்கும் சூழ்நிலையில், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 850 நூற்பாலைகள் இருக்கின்றன.

எனவே, தங்கள் தேவையை பூர்த்திசெய்ய குஜராத், மராட்டியம் போன்ற வடமாநிலங்களில் இருந்துதான் தமிழக நூற்பாலைகளுக்கு பஞ்சு நூல் இறக்குமதி செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு பஞ்சு நூல் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை ஒரு கிலோ நூல் விலை ரூ.115 உயர்ந்திருக்கிறது.

திருப்பூரில் மட்டும் இந்த நூலை மூலப்பொருளாக வைத்து 25 ஆயிரம் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி உள்பட வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதுதவிர, பல லட்சம் கைத்தறி தொழிலாளர்களும் இந்த நூலை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் கிலோ ரூ.210 ஆக இருந்த நூல் விலை இப்போது ரூ.325-ஐ தாண்டி செல்கிறது என்ற கவலையை விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் வருத்தத்தோடு தெரிவிக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாட்டில் ஜவுளி வணிகத்தில் 3-ல் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. இந்த நூல் விலை ஏற்றத்தால், ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 5 சதவீதம் அடிப்படை சுங்கவரி, 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி, 10 சதவீதம் சமூக வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11 சதவீதமாக உயர்ந்து, பருத்தி விலை ஏற்றத்திற்கும் காரணமானது. எனவே, பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.

முதல்-அமைச்சரின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எப்படி பட்டு வளர்ச்சித் துறைக்கு தனி துறை ஏற்படுத்தி பட்டு நூல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுபோல, பருத்தி சாகுபடிக்கும் தனி துறையை ஏற்படுத்தி அதை கைத்தறி துறையோடு இணைத்து பஞ்சு உற்பத்தி இலக்கை அடைய வேண்டும். அதற்கான தொழில் நுட்பமும், முயற்சியும் தமிழ்நாட்டில் தேவையான அளவு உள்ளது.

Next Story