2 மாதங்களுக்கு ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு!


2 மாதங்களுக்கு ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு!
x
தினத்தந்தி 6 Dec 2021 7:57 PM GMT (Updated: 6 Dec 2021 7:57 PM GMT)

கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு நாளும் ஆய்வுக் கூட்டம், சுற்றுப்பயணம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று வருகிறார்.

கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு நாளும் ஆய்வுக் கூட்டம், சுற்றுப்பயணம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று வருகிறார். எல்லா துறைகளும் ஏற்றம் பெரும்வகையில், அவரது முயற்சிகள் இருக்கின்றன. “என் பெயரைச் சொல்லி ‘நம்பர் ஒன் முதல்-அமைச்சர்’ என்று சொல்வதைவிட, ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய லட்சியம்” என்று பறைசாற்றி வருகிறார்.

அந்தநிலையை தமிழ்நாடு விரைவில் பெற்றுவிடும் என்பதற்கான நல்ல அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன. எந்தவொரு மாநிலமும் வளம்பெறவேண்டும் என்றால், அங்கு தொழில்வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டும். அதனால், உற்பத்தி அதிகரிக்கும், வணிகம் பெருகும், அரசுக்கு வருவாய் கிடைக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும்.

அந்தவகையில், புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு” என்ற பெயரில் தொழில் மாநாடு நடத்தப்படுகிறது. அதுவும், 2 மாதங்களுக்கு ஒருமுறை இப்போது தொழில் மாநாடு நடக்கிறது. கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி நடந்த முதல் மாநாட்டில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இந்த 49 திட்டங்கள் மூலமாக ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிட வகைசெய்யப்பட்டுள்ளது. அடுத்து, செப்டம்பர் மாதம் 22-ந்தேதி “ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு நடந்தது. இதில், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக்கொள்கை வெளியிடப்பட்டு, ரூ.2,120.54 கோடி முதலீட்டில் 41,695 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அதற்கு அடுத்த 2 மாதங்களில், அதாவது கடந்த மாதம் 23-ந்தேதி கோயம்புத்தூரில் நடந்த, “முதலீட்டாளர்கள் முதல் முகவரி - தமிழ்நாடு” மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74,835 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும், ரூ.485 கோடி முதலீட்டில் 1,960 பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுமட்டுமல்லாமல், கடந்த மாதங்களில் நடந்த மாநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,689 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டமாகும். இதைவிட சிறப்பு ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 10 திட்டங்களில் வணிக உற்பத்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் தற்போதைய திட்டங்கள் எல்லாம் பரவலாக தொடங்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட, தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் 22 மாவட்டங்களில் முதலீடுகளை செய்துள்ளன. முதல்-அமைச்சர் அடிக்கடி, “பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி” என்று கூறிய முழக்கங்கள், இப்போது நிறைவேறும் இலக்கை நோக்கி வேகமாக செல்கின்றன.

இவ்வாறு பரவலாக தொழில்களை தொடங்குவதன் மூலம், அந்தந்த மாவட்ட மக்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்படும். மேலும், முதலீடு செய்த நிறுவனங்கள் வணிக உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா உதவிகளையும் தமிழக தொழில்துறை வேகமாக செய்வது பாராட்டுக்குரியது. ஒற்றைச் சாளர முறை இருப்பதால், தேவையான லைசென்சுகளும் மின்னல் வேகத்தில் வழங்கப்படுவது நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

Next Story