தடுப்பூசி விழிப்புணர்வு பணியில் மதத் தலைவர்கள்!


தடுப்பூசி விழிப்புணர்வு பணியில் மதத் தலைவர்கள்!
x
தினத்தந்தி 7 Dec 2021 8:12 PM GMT (Updated: 7 Dec 2021 8:12 PM GMT)

2 ஆண்டுகள் ஆகப்போகிறது, கொரோனா இல்லாத உலகம், கொரோனா இல்லாத இந்தியா, கொரோனா இல்லாத தமிழ்நாடு எப்போது வரும்?, மக்களின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

2 ஆண்டுகள் ஆகப்போகிறது, கொரோனா இல்லாத உலகம், கொரோனா இல்லாத இந்தியா, கொரோனா இல்லாத தமிழ்நாடு எப்போது வரும்?, மக்களின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கொரோனாவின் 2-வது அலையும் படிப்படியாக குறைந்துவருவது எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வைரஸ் தோன்றியிருப்பது மிகவும் கவலையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பிரிட்டோரியா நகரில் ஏஞ்சலிக் கோயட்சீ என்ற தனியார் பெண் டாக்டரிடம் வந்த நோயாளி ஒருவர், “தனக்கு உடல் வலி இருக்கிறது, சற்று தலைவலி இருக்கிறது, தொண்டையில் சற்று ஊரல் இருக்கிறது” என்று கூறினார். அதேநாளில், மேலும் சில நோயாளிகள் இதே அறிகுறியுடன் வந்தனர். டெல்டா அறிகுறியாக இது இல்லாததால், அந்த டாக்டர் சற்று சந்தேகப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பினார். அப்படித்தான் கடந்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதி ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரானை கண்டுபிடித்த முதல் டாக்டர் 33 வயதான ஏஞ்சலிக் கோயட்சீ தான். இதற்கு ஒமைக்ரான் என்று பெயரிட்டதன் காரணம், உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துகளை வைத்துத்தான் பெயரிடுகிறது. இதுவரை வந்த வைரஸ்களுக்கு 12 கிரேக்க எழுத்துகள் பெயர்கள்தான் வரிசைப்படி வைக்கப்பட்டுள்ளது. இப்போது 13-வது எழுத்து ‘நூ’ என்றும், 14-வது எழுத்து ‘ஜி’ என்றும் வருகிறது. 13-வது எழுத்தை சூட்டினால் நியூ (புதிது) என்று பொருள் வந்துவிடும். அடுத்த எழுத்தான ‘ஜி’ என்பது, சீன அதிபர் பெயரின் முதல் எழுத்து என்பதால், 15-வது எழுத்தை கொண்டு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டது.

இந்த ஒமைக்ரான் வைரஸ் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் வருகிறது என்றாலும், பாதிப்பு மிதமான அளவே ஏற்படுகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையோ, தீவிர சிகிச்சையோ தேவையில்லை என்பதால், 2 டோஸ் தடுப்பூசி மிகமிக அவசியம். அதோடு, முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, ஒமைக்ரான் பரவுவதை தடுக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

இந்தியாவில் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் சராசரியை கருத்தில் கொண்டால், தமிழ்நாட்டில் இன்னும் அந்த நிலையை நாம் எட்டவில்லை. இங்கு முதல் டோஸ் போட்டவர்கள் 80.70 சதவீதம் என்றும், 2-வது டோஸ் போட்டவர்கள் 47.89 சதவீதம் என்றும் தெரிவித்த மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த சனிக்கிழமை நடந்த மெகா முகாமில் 20 லட்சத்து 98 ஆயிரத்து 712 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், இந்த இலக்கை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு தடுப்பூசி நம்மிடத்தில் கையிருப்பு உள்ளது. ஆனால் மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு வருகிற 13-ந்தேதி தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்டு தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல கேட்டிருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

இது மிகமிக நல்ல யோசனை. இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் இதை ஒரு சமுதாய கடமையாக ஏற்று, தங்கள் கட்சி தொண்டர்களில் ஒருவர்கூட தடுப்பூசி போடாமல் இல்லை என்ற வகையில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்திக் கூறவேண்டும் என்பதே இன்றைய தேவையாக இருக்கிறது.

Next Story