11 ஆயிரம் பேருக்கு அரசு வேலை


11 ஆயிரம் பேருக்கு அரசு வேலை
x
தினத்தந்தி 8 Dec 2021 7:38 PM GMT (Updated: 2021-12-09T01:08:44+05:30)

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் சரி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளிலும் சரி வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் சரி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளிலும் சரி வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு என்பது அரசு, தனியார் தரப்பு என்று இருவரும் வழங்க வேண்டிய ஒன்றாகும். இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது முதல் கனவாக இருக்கிறது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்போது வரை 2 ஆண்டுகளாக அரசுப்பணிகளுக்கு வேலைநியமனங்கள் நடைபெறவில்லை. இதற்கு கொரோனாவும் ஒரு முக்கிய காரணமாகும். தி.மு.க.வின் தேர்தல்அறிக்கையிலேயே தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய வாக்குறுதியாகும். இந்த ஆண்டே நல்ல தொடக்கமாக 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்பும்வகையில் தேர்வுகள் நடத்தப்படும் என்ற நல்லசெய்தியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழு தலைவர் க.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டில் என்னென்ன பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்ற ஆண்டு அட்டவணையை அவர் வெளியிட்டது, வேலையில்லாமல் வாடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இப்போதெல்லாம் மருத்துவம் படித்தவர்கள் என்றாலும் சரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் என்றாலும் சரி வேறெந்த தொழில்படிப்புகள் படித்தவர்கள் என்றாலும் சரி தேர்வாணையக்குழு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று அரசுவேலைகளில் சேர பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழு மூலமாக குரூப்-1, 1ஏ, 1பி, 1சி என்றும், குரூப்-2, 2ஏ என்றும், குரூப்-3, குரூப்-4, குரூப்-7பி, குரூப்-8 என்றும் பல்வேறு பணிகளுக்கு வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சப்ரிஜிஸ்திரார், நகராட்சி ஆணையர், தொழிலாளர்துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, ஆடிட் இன்ஸ்பெக்டர், நன்னடத்தை அதிகாரி, தொழில்கூட்டுறவு அதிகாரி, உதவிப்பிரிவு அதிகாரி என்பது போன்ற குரூப்-2, 2ஏ பிரிவு பணிகளிலுள்ள 5 ஆயிரத்து 831 காலியிடங்களுக்கும், இளநிலை உதவியாளர், பில்கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், நிலஅளவையாளர், கிராம நிர்வாக அதிகாரி போன்ற குரூப்-4 பணிகளிலுள்ள 5 ஆயிரத்து 255 காலியிடங்களுக்கும் அறிவிக்கை வெளியிடப்பட இருக்கிறது. குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்திலும், குரூப்-4 பணிகளுக்கு மார்ச் மாதத்திலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 75 நாட்களில் தேர்வுகள் நடக்கும் என்று க.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வசதியாக இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அடுத்தசிலநாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. பாடத்திட்டங்கள் மட்டுமல்லாமல், மாதிரி வினாத்தாள்களும் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. நல்ல காலஅவகாசம் இருப்பதால் மாணவர்கள் நன்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு தேர்வு எழுதவும் வாய்ப்புள்ளது. இந்த 11 ஆயிரம் காலியிடங்கள் என்பது 2020-21-ம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டின்படி உருவாக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கை வெளியிடும்போது மேலும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் காலியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏறத்தாழ 14 ஆயிரம் இடங்களுக்கு தேர்வுநடைபெறும் சூழ்நிலையில் இனி மாணவர்கள் கையில்தான் இருக்கிறது. இந்த தேர்வுமட்டுமல்லாமல், மேலும் பல பணிகளுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட உள்ளது. துணைகலெக்டராக வேண்டும், துணை போலீஸ்சூப்பிரண்டு ஆகவேண்டும் என்ற ஆசையில் குரூப்-1 தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்லசெய்தியாக ஜூன் மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. ஆக இப்போதுள்ள திட்டத்தில் பல்வேறு துறைகளிலுள்ள 32 வகையான பணிகளுக்கு தேர்வு நடக்கவிருக்கிறது. அரசு பணியாளர் தேர்வாணையக்குழு இந்த தேர்வுகள் முறையாக நடப்பதற்கும், எந்த முறைகேட்டுக்கும் இடமில்லாமல் நடத்துவதற்கும் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே தகுதியிருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்ற உறுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தேர்வாணையக்குழு அளித்த உறுதிமொழிப்படி, ஏறத்தாழ 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகளில் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்படும் பொற்காலம் 2022-ல் வரப்போகிறது என்ற பிரகாசமான காலம் கண்ணில் தெரிகிறது.

Next Story