முடிவுக்கு வந்த 378 நாட்கள் விவசாயிகள் போராட்டம்!


முடிவுக்கு வந்த 378 நாட்கள் விவசாயிகள் போராட்டம்!
x
தினத்தந்தி 10 Dec 2021 8:58 PM GMT (Updated: 2021-12-11T02:28:34+05:30)

“பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே.. பழகி களித்த தோழர்களே.. பறந்து செல்கின்றோம் நாம்.. பறந்து செல்கின்றோம்..”

“பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே.. பழகி களித்த தோழர்களே.. பறந்து செல்கின்றோம் நாம்.. பறந்து செல்கின்றோம்..” என்ற உணர்வுகள்தான், டெல்லியின் எல்லைப் பகுதியிலுள்ள முக்கிய சாலைகளில் கடந்த 378 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி, தற்போது வெற்றியுடன் வீடு திரும்பும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள். ஆனால், முதுகெலும்புகளை எப்படி திரும்பி பார்க்க முடியாதோ, அப்படித்தான் விவசாயிகளையும் காலம் திரும்பிப்பார்க்கவில்லை. “உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது தமிழின் இலக்கிய மரபு. ஆனால், உண்டி கொடுத்து உயிர் கொடுப்போருக்கு, உண்டியும் கிடைப்பதில்லை, உயிரும் கிடைப்பதில்லை என்பதுதான் நிகழ்கால சோகமாகும்.

வாயில்லா பூச்சிகளாக இருந்த விவசாயிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நின்றனர். நவம்பர் 26-ந்தேதி முதல் டெல்லி எல்லையில், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநில விவசாயிகள், சாலைகளில் குடும்பத்தோடு அமர்ந்து போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் தொழிலுக்கு உத்தரவாதம் வேண்டும், தங்கள் விளைச்சலுக்கு விலை வேண்டும் என்பது உள்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள்.

விவசாயிகள் விளைவிக்கும் பயிர் எப்படி வெயிலையும், புயலையும், மழையையும், குளிரையும் தாங்கி நின்று போராடி பலன் தருகிறதோ, அதுபோல கடந்த 378 நாட்களாக, எல்லா பருவநிலைகளையும் தாண்டி நின்று விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உடல்நலம் குன்றியவர்கள் ஒரு பகுதி. நோயுற்றவர்கள் ஒரு பகுதி. உயிரிழந்தவர்கள் 700 பேர் என்று, அடுக்கடுக்கான சோகங்களை தாங்கிய பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

உழைப்பாளிகளுக்கு எதிராக எதுவும் நிலைத்து நிற்க முடியாது என்ற வகையில், கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்ற உறுதியை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அறிவித்தார். “எங்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்” என்று விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து, மத்திய அரசாங்கத்தின் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், எழுத்துப்பூர்வமாக உறுதியை அளித்தார். “விவசாயிகள் மீதான வழக்குகள் நிபந்தனையின்றி திரும்ப பெறப்படும், மாநிலங்களில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்ப பெறப்படும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும், குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து பரிசீலிக்க நியமிக்கப்படும் குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்” என்பது உள்பட பல உறுதிமொழிகள் கூறப்பட்டிருந்தது.

அதன்பிறகு, விவசாயிகளும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட இருப்பதால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர். இத்தனை நாட்கள் கூடாரம் அமைத்து தங்கிய விவசாயிகள் கூடாரங்களை பிரித்து வீடு திரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாது, தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் குவிந்துகிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

ஜனவரி 15-ந்தேதி மீண்டும் கூடி, அரசு வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்றியுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்போம் என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்துள்ளனர். போராட்ட காலத்தில் ஒரே குடும்பமாக இருந்த விவசாயிகள், இப்போது பிரிய மனமின்றி ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 378 நாட்கள் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், அரசாங்கத்துக்கும் மகிழ்ச்சி, அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி, விவசாயிகளை போலவே இரவும், பகலும் பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினருக்கும் மகிழ்ச்சி. மொத்தத்தில் இந்த போராட்டத்தின் முடிவு அனைவருக்கும் வெற்றியாகும்.

Next Story