பாகிஸ்தானை வென்ற போரின் பொன் விழா!


பாகிஸ்தானை வென்ற போரின் பொன் விழா!
x
தினத்தந்தி 12 Dec 2021 7:56 PM GMT (Updated: 12 Dec 2021 7:56 PM GMT)

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படை வீரர்களும், விவேகமாக திட்டமிட்டு போரிடுவதில் வல்லவர்கள் என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியது, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்திய போர்தான்.

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படை வீரர்களும், விவேகமாக திட்டமிட்டு போரிடுவதில் வல்லவர்கள் என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியது, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்திய போர்தான்.

அந்த நேரத்தில், 1971-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி ராணுவ தளபதி சாம் மானேக்‌ஷாவை பிரதமர் இந்திராகாந்தி வரவழைத்து, “பாகிஸ்தானுடன் போர் தொடுக்கவேண்டும்” என்று கூறினார். எதையுமே சிந்தித்து, யூகம் வகுத்து செயலாற்றும் சாம் மானேக்‌ஷா, “இப்போது உடனடியாக போர் தொடுக்க முடியாது. பாகிஸ்தானில் மழை காலம் விரைவில் தொடங்கும். மேலும், எனக்கு நிறைய புதிய ஆயுதங்கள்வேண்டும். நவம்பர் மாதம் மழை நின்றுவிடும். ஆறுகளில் தண்ணீர் வடிந்துவிடும். மலைகளில் பனிப்பாறைகள் உருவாகி, பாகிஸ்தானுக்கு சீனா உதவும் முயற்சிகளை தடுத்துவிடும். தேர்தல் பணிக்காக சென்றுள்ள வீரர்களையும் ஒருங்கிணைத்து எல்லைக்கு கொண்டுவரவேண்டும்” என்று பல விதமான வியூகங்களை கூறி, இந்திராகாந்தியிடம் போரை தள்ளிவைக்கவேண்டும் என்று கூறினார்.

சாம் மானேக்‌ஷாவின் யோசனையை இந்திராகாந்தியும் ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில், சாம் மானேக்‌ஷா விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் பி.சி.லால், கடற்படை தளபதி அட்மிரல் நந்தா ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தி, இந்திராகாந்தியிடம் டிசம்பர் 4-ந்தேதி, “மும்முனை தாக்குதலையும் தொடங்குகிறோம்” என்று தெரிவித்து போரை தொடங்கினார்.

கிழக்கு பிராந்திய ராணுவ கமான்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.அரோரா தலைமையில் டாக்காவை நோக்கி படையெடுத்து பாகிஸ்தானின் ராணுவ டாங்குகளை நொறுக்கித் தள்ளியது. கப்பல் படை கராச்சி துறைமுகத்துக்கு சென்று ஏவுகணை படகுகள் மூலம் அங்கிருந்த கப்பல்களை எல்லாம் நொறுக்கியது. எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்தன. விமானப்படை குண்டு வீச்சு பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியவில்லை. இந்த நேரம் ஜெனரல் சாம் மானேக்‌ஷா தொடர்ந்து ரேடியோவில் பாகிஸ்தான் ராணுவத்தை சரணடையும்படி கூறிக்கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் ராணுவம் இருக்கும் இடங்களில் எல்லாம், வானில் இருந்து நோட்டீசுகள் வீசி எறியப்பட்டன. “இந்தியப் படைகள் உங்களை சூழ்ந்துவிட்டது. உங்கள் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது. துறைமுகங்கள் எல்லாம் இந்திய கடற்படையால் முடக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக யாரும் உங்களை நெருங்க முடியாது. உங்கள் எதிர்காலம் சீலிடப்பட்டுள்ளது. நீங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் குழந்தைகளோடு இருக்க விரும்பவில்லையா?. உங்களுடைய ஆயுதங்களை இந்திய ராணுவ வீரரிடம் ஒப்படைப்பதில் எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. ஒரு ராணுவ வீரருக்கு உள்ள மரியாதையை உங்களுக்கு கொடுப்போம்” என்று அடிக்கடி கூறியது, பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலைய வைத்தது.

“எந்த நிபந்தனையும் இல்லாமல் சரணடையவேண்டும்” என்று சாம் மானேக்‌ஷா கூறினார். இறுதியில் டிசம்பர் 16-ந்தேதி பாகிஸ்தானின் கிழக்கு பகுதி தளபதி ஏ.ஏ.கே.நியாஸி தன் கைத்துப்பாக்கியை ஒப்படைத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்களோடு சரணடைந்தார். இந்திராகாந்தி போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் இரண்டாக பிளவுபட்டு, பாகிஸ்தான், வங்கதேசம் என்றானது.

சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றியின் பொன்விழா வருகிற 16-ந்தேதி வருகிறது. இந்த நாளை முப்படைகள் மட்டுமல்லாமல், மக்களும் சிறப்பாக கொண்டாடவேண்டும். இந்த வெற்றிக்கு வித்திட்ட சாம் மானேக்‌ஷாவையும், துணை நின்ற ஏர்சீப் மார்ஷல் பி.சி.லால், அட்மிரல் நந்தா ஆகியோரின் தியாகங்களையும், போரிட்ட வீரர்களையும் இந்தியா நினைவுகூறவேண்டும். உயிர்நீத்த 2,900 வீரர்களின் நினைவையும் போற்றவேண்டும்.

2-வது உலகப்போரின் 50-வது ஆண்டு பொன்விழா 1995-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி கொண்டாடப்பட்டது. அப்போது உயிரோடிருந்த இங்கிலாந்து ராணுவப்படை வீரர்களை, அவர்கள் எந்தெந்த நாடுகளில் தங்கியிருந்து போரிட்டார்களோ, அங்கேயே அழைத்துச்சென்று இங்கிலாந்து அரசாங்கம் கவுரவப்படுத்தியது. அதுபோல, பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெற்றிக்கு காரணமான, இப்போது உயிரோடு இருக்கும் இந்திய வீரர்களையும் அழைத்து கவுரவிக்கவேண்டும் என்பதே, அவர்களுக்கு நாடு எழுந்து நின்று அடிக்கும் “ராயல் சல்யூட்” ஆகும்.

Next Story