தொழில் வளர்ச்சிக்கு உதவும் சிட்கோ மனை விலை குறைப்பு!


தொழில் வளர்ச்சிக்கு உதவும் சிட்கோ மனை விலை குறைப்பு!
x
தினத்தந்தி 13 Dec 2021 8:12 PM GMT (Updated: 2021-12-14T01:42:50+05:30)

தொழில் வளர்ச்சி ஏற்பட கனரக தொழிலும் வளரவேண்டும், சிறு தொழில்களும் வளரவேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்தால், வேலைவாய்ப்பு அதிகமாக பெருகும்.

தொழில் வளர்ச்சி ஏற்பட கனரக தொழிலும் வளரவேண்டும், சிறு தொழில்களும் வளரவேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்தால், வேலைவாய்ப்பு அதிகமாக பெருகும். இந்தியாவில் இத்தகைய நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 49 லட்சத்து 48 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 96 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறையின் செயலாளர் அருண் ராய் ஆகியோர் இந்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டிவருகின்றனர். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் சிட்கோ நிறுவனம் தொழில் வளர்ச்சியில் அரிய பங்காற்றி வருகிறது.

தற்போது, சிட்கோ நிறுவனம் 122 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. மகளிருக்கென தனியாக 5 தொழிற்பேட்டைகளும், ஒரே வகை பொருள் தயாரிப்புக்காக 5 தொழிற்பேட்டைகளும், ஒரு தனியார் தொழிற்பேட்டையும் இயங்கிவருகிறது. மேலும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய 4 இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு, 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்த ஆண்டு சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இங்குள்ள தொழில் மனைகளின் விலை ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. 2013-ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 13 சதவீதம் வரை நிலத்தின் மதிப்பை உயர்த்த அறிவுறுத்தப்பட்டதால், தற்போது நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சிட்கோவிலுள்ள 1,311 மனைகளும், 371 ஏக்கர் நிலமும் விற்பனையாகாமல் காலியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிட்கோ மனை விலையை குறைக்கவேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மனை விலையை குறைத்தால் அரசுக்கு 2 லாபம். ஒன்று விற்கப்படாத மனைகள் விற்கப்படும் சூழல் ஏற்படும். அடுத்து, அவ்வாறு விற்கப்படும் மனைகளில் இருந்து கிடைக்கும் தொகையை கொண்டு, மேலும் பல புதிய தொழிற்பேட்டைகளை அரசால் உருவாக்க முடியும். இந்தநிலையில், சிட்கோவின் 50 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், பல தொழிற்பேட்டைகளில் மனைகளின் விலையை குறைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 5 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பல இடங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஒரு ஏக்கர் விலை ரூ.1 கோடியே 19 லட்சத்து 79 ஆயிரத்திலிருந்து 75 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.30 லட்சத்து 81 ஆயிரத்து 200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கும்பகோணம், நாகப்பட்டினம், குறிச்சி, விண்ணமங்கலம், ஆலத்தூர், ஈரோடு, காரைக்குடி, கிடாநேரி, ராஜபாளையம், விருதுநகர், அரக்கோணம், பர்கூர் போன்ற தொழிற்பேட்டைகளில் மனையின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அம்பத்தூர், திருமழிசை உள்பட 12 தொழிற்பேட்டைகளில் 2016-2017-ம் ஆண்டில் இருந்த மனை மதிப்பே இந்த ஆண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், 2,500 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ரூ.160 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு, தமிழகம் தொழில் வளர்ச்சி இலக்கை அடைவதற்கு சீரிய பங்களிப்பை நல்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு அளிக்கும் சலுகை, தொழில் வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.

Next Story